“நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?” (ரோமர் 7:24).

தேவன் இல்லாமல் நாம் உதவியற்ற நிலையில் இருக்கிறோம் என்ற ஒரு ஆழமான காரியத்தை இதில் நாம் பார்க்கிறோம். நம்முடைய வாழ்க்கையில் தேவனை அதிகமாகச் சார்ந்துகொள்ள தவறுவதற்கு முக்கிய காரணம், நம்முடைய நிர்ப்பந்தமான நிலையை நாம் விளங்கிக்கொள்ளாததினால் தான். நம்முடைய வாழ்க்கையில் சுயம் என்ற பாவம் ஆழமாய் பதிந்திருக்கிறது. நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் வளர்சிக்கு இதுவே மிகப் பெரிய தடையாக இருக்கிறது. எந்தளவுக்கு தேவன் இல்லாமல் நான் உதவியற்றவன் என்று உணருகின்றேனோ அந்தளவுக்கு என் ஜெப வாழ்க்கை வளர முடியும். அந்தளவுக்கு தேவனுடைய வார்த்தையைப் பற்றிக்கொண்டு வாழுகிற வாழ்க்கையின் நடைமுறை காரியம் என்னில் காணப்படும். நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையிலும், தேவன் இல்லாமல் நாம் உதவியற்றவர்களாகவே காணப்படுகிறோம். நம்முடைய உண்மையான நிலையை நாம் உணரும்போது, அது நம்மைத் தாழ்த்தவும் தேவனை முற்றிலும் சார்ந்துகொள்ளவும் நம்மை வழிநடத்தும். ஆண்டவர் தெளிவாகச் சொல்லியிருக்கிறார், என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது என்று. அற்பகாரியம் முதலாய் உங்களால் செய்யக் கூடாதிருக்க என்றும் சொல்லுகிறார். தேவனுடைய இந்த வார்த்தைகளை நாம் அறிந்திருந்தும், ஏன் நம்மைத் தாழ்த்தி அவருடைய உதவிக்காக கெஞ்சி, நம்முடைய நிர்ப்பந்தமான நிலையை உணர்ந்து ஜெபிப்பதில்லை? நம்முடைய வாழ்க்கையில் நாம் மேன்மை பாராட்டும்படியாக எதுவுமேயில்லை. ஆகவேதான் பவுல் சொல்லுகிறார், என் பெலவீனங்களைக் குறித்தேயல்லாமல் மேன்மை பாராட்ட என்னிடத்தில் ஒன்றுமே கிடையாது என்று. நம்மைக் குறித்த மேலான சிந்தைகளும் எண்ணங்களும் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மிகப் பெரிய எதிரியாகக் காணப்படுகிறது. நாம் அதை உணராமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கர்த்தருடைய சமூகத்தைத் தேடுவதில் நாம் எவ்வளவு குறைவுள்ளவர்களாய் காணப்படுகிறோம்?  நம்முடைய மெய்யான நிர்ப்பந்தமான நிலையை உணர்ந்து, நம்மைத் தாழ்த்தி ஆண்டவரை நாம் பற்றிக்கொள்வோம்.