“ஒரு குதிரை வனாந்தர வெளியிலே நடக்கிறதுபோல, அவர்கள் இடறாதபடிக்கு அவர்களை ஆழங்களில் நடக்கப்பண்ணினவர் எங்கே?” (ஏசாயா 63:13)

நம்முடைய வாழ்க்கையில் நம்மை வழிநடத்தக்கூடிய தேவன் ஒருவர் உண்டு என்ற விசுவாசத்தை ஒருக்காலும் நாம் விட்டுவிடக் கூடாது. நம்முடைய வாழ்க்கையில் நாம் ஆழங்களில் நடக்கிறவர்களைப் போலக் காணப்படலாம். பல நெருக்கங்கள் போராட்டங்கள் வழியாய் கடந்து போகலாம். ஆனால் நமக்கு இருக்கும் ஒரு நம்பிக்கை, தேவன் நாம் இடறாதபடிக்கு நம்மை நடக்கப்பண்ணுகிறவர். நம்முடைய தேவன் நாம் இடறும்படியாக நம்மைக் கைவிடுகிறவர் அல்ல. நம்முடைய வாழ்க்கையின் எல்லாச் சூழ்நிலைகளிலும் அவரைத் தேடுகிற உணர்வோடு வாழுகிறவர்களாய்க் காணப்படுவது மிக அவசியம். 12ஆம் வசனத்தில் “அவர்கள் நடுவிலே தம்முடைய பரிசுத்த ஆவியை இருக்கக் கட்டளையிட்டு, மோசேயின் வலதுகையைக் கொண்டு அவர்களைத் தமது மகிமையின் புயத்தினாலே நடத்தி, தமக்கு நித்தியகீர்த்தியை உண்டாக்க அவர்களுக்கு முன்பாகத் தண்ணீரைப் பிளந்து” என்று வேதம் சொல்லுகிறதை நாம் வாசிக்கிறோம். ஒரு கிறிஸ்தவ வாழ்க்கை என்பது தேவனுடைய உன்னதமான கரத்தை ஒவ்வொரு அடியிலும் பார்க்கக் கூடிய ஒரு விசுவாச வாழ்க்கை. நம்முடைய வாழ்க்கையில் அநேக காரியங்களை நாம் விசுவாசக் கண்களால் பார்க்கத் தவறிவிடுகிறோம். ஆனால் ஒவ்வொரு அடியிலும் சிந்தித்துப் பார்க்கும்பொழுது, கர்த்தர் நம்மை மிகுந்த ஆச்சரியமாய் வழிநடத்துகிறார். அவருக்கு நன்றியுள்ள உணர்வோடு நாம் வாழுவோம்.