“நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்” (ஏசாயா 57:15).

என்ன ஒரு அருமையான தேவன்! இந்த தேவன் ஒரு தாழ்மையான இருதயத்திலும் வாசம் பண்ணுகிறார் என்பதை நாம் பார்க்கிறோம். இந்த தேவன் நம்முடைய இருதயத்தில் வாசம் பண்ணுகிறார் என்று சொன்னால், இதைப் போல வேறொரு சிலாக்கியம் என்பது உண்டா? ஆனால் நம்முடைய வாழ்க்கையில் இந்த தேவன் வாசம் பண்ணுவதற்கு நம்மில் காணப்பட வேண்டிய காரியங்களைக் குறித்து நாம் பார்க்கிறோம். “பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்” என்று தேவன் சொல்லுகிறார். மெய்யாலுமே நம்மைக் குறித்து நாம் சிந்திக்கும்பொழுது, இந்த மகாப் பெரிய தேவன் நம்மை தெரிந்துகொள்ள நாம் எம்மாத்திரம்? அவருடைய சுத்த இரக்கத்தினாலும் கிருபையினாலும் அவருடைய பிள்ளைகளாய் வாழுவதற்கு நமக்கு சிலாக்கியத்தைக் கொடுத்திருக்கிறார். இதை நாம் எண்ணிப்பார்க்கும்பொழுது நாம் முற்றிலும் தகுதியற்றவர்கள். ஆனால் ஆண்டவர் நம்மில் வாசம் பண்ணும்பொழுது, அவருடைய ஊழியத்திலும் அவருக்காக சாட்சியாய் வாழுகிறதிலும் பரிசுத்த ஆவியானவர் நம்மை உற்சாகப்படுத்துகிறார். நாம் சோர்ந்துப் போக வேண்டிய அவசியமில்லை. அநேகர் ஆவிக்குரிய வாழ்க்கையில் சோர்ந்துப் போகிறார்கள். காரணம் அவர்களில் தாழ்மை இல்லாததினால் பரிசுத்த ஆவியானவர் அவர்களில் செயல்படுவதில்லை. ஆனால் நம்முடைய வாழ்க்கையில் தாழ்மையுள்ள சிந்தையோடு இருக்கும்பொழுது பரிசுத்த ஆவியானவர் நம்மை உற்சாகப்படுத்துவார். நம்மைப் பெலப்படுத்துவார். ஆண்டவருக்கென்று சந்தோஷமாக வாழ நமக்குக் கிருபைச் செய்வார்.