“இப்படி மனப்பூர்வமாய்க் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் எம்மாத்திரம்? என் ஜனங்கள் எம்மாத்திரம்? எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம்” (1நாளாகமம் 29:14).

தாவீது தேவனுடைய ஆலயத்தைக் கட்டும்படியாகக் கொடுக்கப்பட்ட காரியங்களுக்காக ஆண்டவருக்கு நன்றி சொல்லுகிற வேளையில் ஜெபித்த இந்த ஜெபம் மிகவும் அர்த்தமுள்ளதாகக் காணப்படுகிறது. நான் கொடுத்தேன் என்ற எண்ணத்தோடு தாவீது ஜெபிக்கவில்லை. மனப்பூர்வமாய்க் கொடுக்கும் திராணி எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லுகிறான். கொடுக்கும் சிந்தையையும் கர்த்தரே எனக்குக் கொடுக்கிறார். என்ன ஒரு அருமையான தாழ்மையோடு தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்தக்கூடியதாக இது இருக்கிறது! என் ஜனங்கள் எம்மாத்திரம்? எல்லாம் உம்மால் உண்டானது என்று சொல்லுகிறான். அநேகர் தேவனுடைய காரியங்களுக்குக் கொடுப்பதைக் குறித்து மேன்மைபாராட்டுகிறதைக் குறித்து நாம் பார்க்கிறோம். உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம் என்றும் தாவீது சொல்லகிறான். தாவீது தான் பெற்றிருக்கின்ற எல்லாக் காரியங்களும் தேவனால் கொடுக்கப்பட்டது என்ற மெய்யான உணர்வு, தாழ்மையுள்ளவனாய் அவனை வழிநடத்திற்று. நம்முடைய வாழ்க்கையில் நாம் பெற்றிருக்கும் அனைத்துமே தேவனுடையது. நாம் இந்த உலகத்தில் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை ஒன்றும் கொண்டு போவதும் இல்லை. ஆனால் எவ்வளவு வேளைகளில் நாம் பெற்றிருப்பவைகள் நம்முடையது என்று பெருமை பாராட்டுகிறோம். அதினால் தேவன் நமக்கு கொடுத்திருக்கின்றக் காரியங்களுக்கு நன்றி சொல்லத் தவறுகிறோம். நாம் நம்முடைய வாழ்க்கையில் பெற்றிருக்கின்ற காரியங்களில் தேவனுக்கு நன்றியுள்ளவர்களாக வாழுவது தேவனுக்கு உகந்ததாகக் காணப்படுகிறது. தாழ்மையான உணர்வோடு செலுத்தப்படும் ஸ்தோத்திரபலிகள் நம்முடைய வாழ்க்கையில் ஆசீர்வாதமாகக் காணப்படும் என்பதில் சந்தேகமில்லை.