ஜனவரி 3  

 “முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம்.” (ஏசாயா 43:18).

நம்முடைய வாழ்க்கையில் ஒருவேளை முந்தின காரியங்களை நினைக்கும்பொழுது, நம்முடைய வாழ்க்கையில் ஏற்பட்ட பல தோல்விகளையும் வருத்தங்களையும் வேதனைகளையும் எண்ணுவதற்கு வாய்ப்புண்டு. பூர்வமானவைகளில் அநேக காரியங்கள் நம்முடைய ஆத்துமாவுக்கு வேதனை கொடுக்கிறதாக இருக்கலாம். ஆனால் ஆண்டவர் அதை நினைக்கவும் சிந்திக்கவும் வேண்டாம் என்று சொல்லுகிறார். ஏன் இவ்விதம் சொல்லுகிறார்? அவர் ஒரு புதிய காரியத்தைச் செய்கிறேன் என்று சொல்லுகிறார். “இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்” (ஏசாயா 43:19). இந்தப் புதிய காரியங்கள் என்பது சாதாரணமானவைகள் அல்ல. அவைகள் மிகவும் உன்னதமானவைகள். ஏனென்றால் வனாந்திரத்தில் ஆண்டவர் வழியை ஏற்படுத்துகிறார். வனாந்திரம் என்பது ஒரு வழியற்ற, திக்கு திசை தெரியாத, நம்மை தடுமாறச் செய்யக்கூடிய ஒரு காரியம். ஆனால் ஆண்டவர் சொல்லுகிறார், அந்த வனாந்திரப் பாதைகளில் அவர் அருமையாக வழியை ஏற்படுத்துகிறேன் என்று சொல்லுகிறார். அவாந்திரவெளியில் ஆறுகளை உண்டாக்குவேன் என்றும் சொல்லுகிறார். அதாவது தண்ணீரற்றக் கடுமையான சூழ்நிலையின் மத்தியிலே, வெறும் தண்ணீர் மட்டுமல்ல ஆறுகளையே உண்டாக்குவேன் என்று சொல்லுகிறார். ஏனென்றால் அவர் உன்னதமானவர். அவரால் செய்யக்கூடாத காரியம் ஒன்றுமில்லை. மேலும் ஏசாயா 46:9-ல் “நானே தேவன் எனக்குச் சமானமில்லை” என்று சொல்லுகிறார். தேவன் செய்ய நினைப்பது ஒன்றும் தடைபடாது. அவரால் எல்லாம் கூடும். ஆகவே நாம் அவரை விசுவாசித்து வாழ்க்கையில் முன்னேறிச் செல்வோமாக.