“அப்பொழுது நீங்கள் கொண்டிருந்த ஆனந்த பாக்கியம் எங்கே? உங்கள் கண்களைப் பிடுங்கி எனக்குக் கொடுக்கக்கூடுமானால், அப்படியும் செய்திருப்பீர்கள் என்று உங்களுக்குச் சாட்சியாயிருக்கிறேன்” (கலாத்தியர் 4:15).

இந்த கலாத்திய சபை மக்களுக்கு என்ன நடந்தது? ஒரு காலத்தில் அவர்கள் ஆனந்த பாக்கியமுள்ளவர்களாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அநேகர் கிறிஸ்தவ வாழ்க்கையில் ஆரம்ப நாட்களில் மிகுந்த சந்தோஷத்தோடு இருப்பார்கள். ஆனால் அவருடைய வாழ்க்கையில் தேவன் கிருபையாக இரட்சித்திருக்கிறார் என்ற உணர்வோடு தொடர்ந்து வாழாமல், சுயத்தை சார்ந்து வாழ ஆரம்பித்து விடுகிறார்கள். அதாவது தங்களுடைய சொந்த முயற்சியினால், பலத்தினால் ஆவிக்குரிய வாழ்க்கை வாழ பிரயாசப்படுவதுண்டு. அப்பொழுது பல தோல்விகளை சந்திக்கிறார்கள். நாம் கிருபையின் அடிப்படையில் வாழ வேண்டும். ஆனால் இந்த கலாத்தியர் மற்றவர்களுடைய பல போதனைகளைச் சார்ந்து, கிரியையின் அடிப்படையிலான ஒரு ஆவிக்குரிய ஓட்டத்தை ஓட ஆரம்பித்துவிட்டார்கள். அப்பொழுது அவர்கள் கொண்டிருந்த அந்த பாக்கியத்தை இழந்து விட்டார்கள். இந்த நாளில் நம்முடைய வாழ்க்கையில் ஆனந்த பாக்கியம் உள்ளவராய் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். இது மிக முக்கியம். அநேகருடைய வாழ்க்கையில் அவர்கள் தவறிவிடுகிறார்கள். ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் எப்பொழுதும் நாம் நிதானமாய் ஓடுவதும், நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்வதும் மிக அவசியம். அவருடைய வார்த்தையை சார்ந்து வாழுவதில் நாம் எப்பொழுதும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். தவறான உபதேசங்களுக்கு நாம் செவி கொடுக்க கூடாது. கிருபையால் கத்தர் நம்மை இரட்சித்தார். கிருபையினால் வழிநடத்தி ஓட்டத்தை முடிக்க உதவி செய்வார்.