“அவனை எங்கே வைத்தீர்கள் என்றார். ஆண்டவரே வந்து பாரும் என்றார்கள்” (யோவான் 11: 34).

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து லாசருவை வைத்த இடத்தைக் குறித்து இங்கு கேட்கிறார். அவருடைய மனஉருகத்தை இங்குப் பார்க்கிறோம். அவருடைய இருதயம் ஆழமாக உடைபடுகிறது. 35ஆம் வசனத்தில் நாம் பார்க்கும்பொழுது ‘இயேசு கண்ணீர் விட்டார்.’ மனிதர்களின் உணர்வுகளை விளங்கிக்கொள்ளக் கூடிய ஒரு தேவன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. மனிதனோடு மனிதராய் வாழ்ந்து இந்த உலகத்தில், நம்முடைய எல்லாக் காரியங்களையும் அறிந்திருக்கிறவர். நமக்கு நேரிடுகிற சோதனைகளை அவர் அறிந்திருக்கிறார். நம்மைப் போல எல்லா விதத்திலும் சோதிக்கப்பட்டார் என்று வேதம் சொல்லுகிறது. தேவாதி தேவன் மனிதர்களாகிய நம்முடைய உணர்வுகளை விலைமதிக்கிறார் என்று எண்ணும்பொழுது நமக்கு மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறது! லாசருவுக்காக இயேசு கிறிஸ்து பரிதபித்ததைப் போல அவர் நமக்காகவும் பரிதபிக்கிறார் என்பதை நாம் மறந்துவிட வேண்டாம். ஒருவேளை இந்தக் காலங்களில் நீங்கள் உபத்திரவங்கள் பாடுகள் வழியாய் கடந்துபோனாலும் சோர்ந்துபோகாதீர்கள். உங்களுக்காகப் பரிதபிக்கக்கூடிய ஒரு தேவன் உண்டு. உங்களுக்காக பரிந்து பேசுகிற ஒரு ஆண்டவர் உண்டு. ஆண்டவரே உம்முடைய அன்பு எவ்வளவு பெரிதாய் இருக்கிறது! என்னைக் கிருபையாய் நேசிக்கிற உம்முடைய அன்பிற்கு நான் எப்பொழுதும் நன்றியுள்ளவனாய் வாழ எனக்கு உதவிச் செய்யும் என்று அவரிடத்தில் ஜெபிப்போம். நாம் எப்பொழுதும் நம்முடைய வாழ்க்கையின் மூலமாக அவருடைய நாமத்தை மகிமைப்படுத்துவோமாக.