பிப்ரவரி 13         தேவனுக்கு மறைவாக எங்கே போகமுடியும்?    ஆமோஸ் 9:1-10

“அவர்கள் பாதாளபரியந்தம் தோண்டிப் பதுங்கிக்கொண்டாலும், என் கை அவ்விடத்திலிருந்து அவர்களைப் பிடித்துக்கொண்டுவரும்; அவர்கள் வானபரியந்தம் ஏறினாலும், அவ்விடத்திலுமிருந்து அவர்களை இறங்கப்பண்ணுவேன்” (ஆமோஸ் 9:2).

      தேவனுடைய கோபத்துக்கு முன்பாக நிற்கக் கூடியவன் யார்? அவருடைய கோபத்தை தாங்கி அதை மேற்கொண்டு வாழக் கூடியவர் யார்? தேவனுக்கு மறைவாக எங்கே போகமுடியும்? அவர் அன்பும் கிருபையும் இரக்கமுள்ளவர், ஆனாலும் அவர் பாவத்துக்கு எதிரானவர் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. வேதமானது பாவியின் மேல் தினமும் சினம் கொள்கிற தேவன் என்று சொல்லுகிறது. ஆகவே நம்முடைய வாழ்க்கையில் நாம் தேவனுக்கு புறம்பாக விலகி ஓடக்கூடிய எந்த ஒரு காரியமும் ஒருக்காலும் நம்மில் இருப்பதற்கு நாம் அனுமதிக்கக்கூடாது. ஆண்டவர் நம்முடைய காரியங்களைக் காணவில்லை ஆகவே நான் என் விருப்பத்தின்படி ந செய்கிறேன் என்று சொல்லி, நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்யும்படியான காரியம் எதுவாக இருந்தாலும் ஆண்டவர் நம்மைக் கீழே இறங்கப் பண்ணுவார். ஒருவேளை நம் ஞானத்தைக் கொண்டு வானபரியந்தம் ஏறினாலும் அவ்விடத்திலிருந்து கத்தர் நம்மை இறக்கிவிடுவார். ஆகவே அவருக்கு நாம் பயப்படுவோமாக. அவருடைய கிருபையின் சத்தியத்திற்கு நம்மை ஒப்புக்கொடுப்போம். 

      “உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்? நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும், அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும். இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாயிருக்கும். உமக்கு மறைவாக இருளும் அந்தகாரப்படுத்தாது; இரவும் பகலைப்போல வெளிச்சமாயிருக்கும்; உமக்கு இருளும் வெளிச்சமும் சரி” (சங்கீதம் 139:7) என்று வேதம் சொல்லுகிறது. தேவனுக்கு எதிராக காணப்படுகிற காரியத்தோடு கூடத் தொடர்ந்து நம்முடைய வாழ்க்கையை இணைத்துக் கொள்வதைப் போல அபாயகரமானது ஒன்றுமில்லை. தேவனுக்கு முன்பாக தாழ்த்தி ஆண்டவரே ‘என்மேல் இரக்கமாயிரும்’ என்று சொல்லி அவரைச் சார்ந்து கொள்ளுவது மகிமையான காரியம். தேவனுடைய கிருபைக்கு முன்பாக நம்முடைய வாழ்க்கையில் எதிரிடையாக இருக்கும் எல்லாவற்றையும் நாம் புறம்பாக்கிப் போடுவோமாக.