“ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்ளுவீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்” (மாற்கு 11:24).

நாம் அநேக சமயங்களில் ஜெபிக்கிறோம் ஆனால் அந்த ஜெபத்திற்கான பதிலைப் பெற்றுக்கொள்வதில்லை. மேலும் நாம் ஜெபித்தவுடனே ஆண்டவர் நமக்கு பதில் கொடுக்க வேண்டும் என்றும் எண்ணுகிறோம். ஆனால் தேவன் நம்முடைய ஜெபத்திற்கு எப்பொழுது எந்த விதத்தில் பதில் கொடுக்க வேண்டும் என்பதை அறிந்திருக்கிறார். அவருடைய ஞானத்திற்கு நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும். ஆகவே நம்முடைய வாழ்க்கையில் பொறுமை அவசியம். நாம் ஜெபிக்கிறோம் ஆனால் அதை பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசிப்பதில்லை. நம்முடைய அவிசுவசாமே நம் ஜெபத்திற்கு முதல் தடையாய்க் காணப்படுகிறது. “கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்; ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்” (மத்தேயு 7:7-8). மேலும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்மிடத்தில் வேண்டிகொள்கிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் என்றும் சொல்லுகிறார். ஆண்டவருடைய வார்த்தையை நம்புகிறோம் என்று சொன்னால் ஆண்டவரை நாம் நம்புகிறோம். நாம் விசுவாசத்தோடும் பொறுமையோடும் ஆண்டவரிடத்தில் ஜெபிக்கும்பொழுது நிச்சயமாக அவரிடத்திலிருந்து பெரிய காரியங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். ஒருவேளை நம்மில் அவிசுவாசம் இருக்குமென்றால் அது நீங்கும்படி ஆண்டவரிடத்தில் ஜெபிப்போம். பொறுமைக்காகவும் அவரிடத்தில் ஜெபிப்போம். அப்போது நம்முடைய ஜெபம் இனிமையானதாக இருக்கும். பிலிப்பியர் 4:6-7 “நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.” ஜெபம் என்பது மிக இனிமையானது. ஏனென்றால் நாம் ஜெபிக்கும்பொழுது  தேவனோடு தொடர்பு கொள்கிறவர்களாய் இருக்கிறோம்.