“இயேசு கப்பர்நகூமில் பிரவேசித்தபோது, நூற்றுக்கு அதிபதி ஒருவன் அவரிடத்தில் வந்து: ஆண்டவரே! என் வேலைக்காரன் வீட்டிலே திமிர்வாதமாய்க் கிடந்து கொடிய வேதனைப்படுகிறான் என்று அவரை வேண்டிக்கொண்டான்” (மத்தேயு 8:5-6).

 ஒரு வேலைக்காரனுக்காக அந்த மனிதன் ஆண்டவரிடத்தில் வேண்டிக்கொண்டதின் இரகசியம் என்ன? இவன் ஒரு நூற்றுக்கு அதிபதி. அவன் ஒருவேளை தன்னிடத்தில் இருக்கும்படியான வீரர்களில் ஒருவனை அனுப்பி, ஆண்டவராகிய இயேசுவினிடத்தில் அந்த திமிர்வாதமாக கிடக்கின்றவனுக்கு சுகம் அளிக்கும்படியாகக் கேட்டிருக்கலாம். ஆனால் அவன் தானே ஆண்டவரிடத்தில் போய் தன் வேலைக்காரனுக்காக வேண்டிக்கொண்டான் என்பதை பார்க்கிறோம். பொதுவாக தேவனுடைய கரம் தொடுகிற எந்தவொரு உள்ளமும், ஒரு மாற்றப்பட்ட தாழ்மையின் சிந்தையைக் கொண்ட நிலைக்குள் வந்துவிடுகிறது. ஒரு காலத்தில் பெருமைக்குரியச் சிந்தைகளைக் கொண்டிருந்த காரியங்கள் மறைந்து தாழ்மையை அணிந்து கொள்ளுகிறது. ஒரு மெய்யாய் இரட்சிக்கப்பட்ட மனிதனின் வாழ்க்கையில் அவன் தேவனை நோக்கிப் பார்க்கிறான். அதற்கு முன்பாக அவன் தன்னையே நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தான். மற்றவர்களை நோக்கிப் பார்த்து வாழ்ந்து கொண்டிருந்தான். ஆனால் இப்பொழுது அவன் தேவனை நோக்கிப் பார்க்க ஆரம்பித்துவிட்டான். தேவனை மெய்யாய் நோக்குகிற எந்தவொரு மனிதனும் உடைபடாமல் இருக்க முடியாது. அவருடைய மகத்துவமும், வல்லமையும், புகழும் ஒரு மனிதனுடைய இருதயத்தை உடைக்கிறது. அவன் முற்றிலுமாகத் தன்னைத் தாழ்த்துகிறான். இருதயத்தில் தாழ்மையான உணர்வுக்குள் வருகிறான். இந்த நூற்றுக்கு அதிபதி தன் வேலைக்காரனுக்காகத் தன்னைத் தாழ்த்த வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் அவன் தாழ்த்துகிறான். ஆகவேதான் அவன் சொல்லுகிறான் “ஆண்டவரே நீர் என்னுடைய வீட்டிற்குள் பிரவேசிக்க நான் பாத்திரவான் அல்ல” என்று. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும், இஸ்ரவேலுக்குள்ளே இப்படிப்பட்ட விசுவாசத்தை நான் காணவில்லை என்று சொன்னது விசுவாசத்தை மட்டுமல்ல, அவனின் தாழ்மையையும் சேர்த்தே சொன்னார். தாழ்மையுள்ள மக்களை கிறிஸ்துவானவர் எப்போதும் விசேஷமாக எண்ணுகிறார். அவர்கள் உயர்த்தப்படுவார்கள்.