ஜனவரி 29

 “அவனுக்குப் புத்தி தெளிந்தபோது” (லூக்கா 15:17).

நம்முடைய வாழ்க்கையில் அநேக வேளைகளில் நம் சொந்த அறிவிலும் ஞானத்திலும் காரியங்களைச் செய்யப் பிரயாசப்படுகிறோம். அவைகள் நமக்கு அநேக வேளைகளில் தோல்விகளாக வருத்தம் அளிக்கக்கூடியதாக இருக்கிறது. ஆனால் நாம் இங்கு பார்க்கிறோம் இளையக் குமாரனுக்கு புத்தித் தெளிந்தபோது என்று சொல்லப்படுகிறது. கிறிஸ்தவ வாழ்க்கையில் நாம் நம்முடைய காரியங்களை நம் சொந்த விளங்குதலைக் கொண்டு செய்கிறவர்களாகவே வாழ்ந்துவருகிறோம். ஆனால் எனக்காக யாவற்றையும் செய்து முடிக்கிற என் தேவனாகிய கர்த்தர் என்று சங்கீதக்காரன் சொல்லுகிறபடி, நம்முடைய அறிவிலும் ஞானத்திலும் அல்ல, நமக்காக யாவற்றையும் செய்துமுடிக்கிற அவரை முற்றிலும் சார்ந்து கொள்வது மிக மிக முக்கியமான ஒரு காரியம். அப்போஸ்தலர் 2:37 “இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள்.”  இங்கு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த மக்களும் நின்றுகொண்டிருக்கிறார்கள். இவ்விதமான வேளையில் பேதுரு ஆண்டவருடைய சத்தியத்தைச் சொன்ன பொழுது, அவர்கள் தங்கள் இருதயத்தில் குத்தப்பட்டார்கள். தங்களுடைய தவறை விளங்கிக்கொள்கிறதற்கு ஏதுவாக அவர்கள் உணர்வடைந்தார்கள். நம்முடைய வாழ்க்கையில் நம் பாவங்களைச் சுட்டிக்காட்டி நம் வாழ்க்கையும் நாம் போகும் பாதையும் செம்மைபடுத்தப்படுமானால் அது எவ்வளவு நலமாய் இருக்கும். அநேக வேளைகளில் நம் சொந்த அறிவைக் கொண்டு ஓடும்படியான காரியத்தில் நாம் தவறிவிடுகிறோம். ஆனால் ஆண்டவர் நம்முடைய வாழ்க்கையின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவது மாத்திரமல்ல, நம்மைச் சரியான திசையை நோக்கித் திருப்பும்படியாகச் செய்கிறார். இளைய குமாரன் புத்தி தெளிந்தபோது அவனுடைய வாழ்க்கையில் ஒரு மிகப் பெரிய திருப்பத்தில் ஆசீர்வாதத்தை கண்டான். அவ்விதமாக தேவன் நம்முடைய வாழ்க்கையில் ஒரு ஆசீர்வாதமான வாழ்க்கைக்கு நம்மை வழிநடத்துவராக.