வேதாகமம் என்றால் என்ன?

      வேதாகமம் என்ற சொல் கிரேக்க மொழியில் ‘புத்தகம்’ என்று பொருள்படுகிறது. வேதாகமம் எல்லா மக்களுக்கும், எல்லா காலத்திற்கும் உரியது. இது 66 புத்தகங்களை மாத்திரமே கொண்ட புத்தகம். 40 நபர்களை கொண்டு 1500 ஆண்டுகள் இடைவெளியில்  எழுதப்பட்டது. இத்தனை நபர்கள் எழுதியும், இத்தனை ஆண்டுகள் இடைவெளியில் எழுதப்பட்டும் வேதாகமத்தில் நாம் ஒற்றுமையை பார்க்கின்றோம். வேதத்தில் காணப்படும் ஒற்றுமை இதன் ஆசிரியர் ஒருவரே என்பதை வெளிப்படுத்துகிறது. வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது(2 தீமோ 3:16). மனிதர்களை கருவியாக உபயோகப்படுத்தி தேவன் தம்முடைய பரிபூரண, பரிசுத்த தேவ வார்த்தையை நமக்கு கொடுத்திருக்கிறார் (சங் 12:6, 2பேதுரு 1:21).

      முழு வேதாகமும் ஒரு நபரையே மையமாக கொண்டுள்ளது. அவர் தான் இயேசு கிறிஸ்து. பழைய ஏற்பாட்டில் அவருடைய வருகையைக் குறித்துச் சொல்லுகிறது. புதிய ஏற்பாட்டில் அவர் வந்ததையும், அவருடைய இரட்சிப்பின் பணியையும் குறித்துச் சொல்லுகிறது. இயேசு கிறிஸ்து ஒரு சரித்தரித்தில் சொல்லப்பட்ட நபர் என்பதை விட மேலானவர். அவர் மாம்சத்தில் வந்த தெய்வம். அவருடைய வருகை சரித்தரத்தில் அதிமுக்கியமானது. தேவனே மனிதனாகி இந்த உலகிற்கு தேவன் எவ்விதமானவர் என்பதை இயேசு கிறிஸ்து வெளிப்படுத்தினார். வேதாகமம் தேவனால் மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட தனித்தன்மை வாய்ந்த விசேஷித்த பொக்கிஷம். தேவன் மனிதனோடு பேசும் புத்தகமே வேதாகமம். வேதாகமத்தை விலக்குவது தேவன் நம்மோடு பேசுவதை புறக்கணிப்பதாகும். வேதாகமத்தை தினமும் வாசி. அதில் கர்த்தரின் சத்தத்தை கேட்பாய்.