நவம்பர் 8
“எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக் கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது” (2 கொரி 10:4).
ஒரு கிறிஸ்தவன் என்பவன் போர் வீரன் என்று பவுல் சொல்லுகிறார். அவன் வாழ்க்கையில் சந்திக்கும் படியான போராட்டங்கள் பல உண்டு. வாழ்க்கையில் ஓட்டத்தில் கடந்து போகும் எதிராளிகள் அநேகர் உண்டு. அவன் இந்தப் போராட்டங்களை சந்திக்க வேண்டும் என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. நாம் வாழ்க்கையில் சந்திக்கின்ற எதிர்மாறான சூழ்நிலையில் எந்த பெலத்தைக் கொண்டு போராட ஆயத்தமாக இருக்கிறோம். நம் சொந்த பெலத்தைக் கொண்டா? அல்லது ஆவியானவரின் துணையைக் கொண்டா? இந்த கேள்விக்கு பதிலை சோதித்தறிவது நல்லது.
“சத்தியவசனத்திலும், திவ்விய பலத்திலும்; நீதியாகிய வலதிடதுபக்கத்து ஆயுதங்களைத் தரித்திருக்கிறதிலும்” (2 கொரி 6:7) என்று பவுல் எழுதுகிறார். நம் ஆவிக்குரிய வாழ்க்கையில் இவ்விதமான காரியங்களினால் மாத்திரமே வெற்றியுள்ள வாழ்க்கை வாழமுடியும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அநேக சமயங்களில் கிறிஸ்தவர்கள் என்று சொல்லுபவர்களும் கூட தங்களின் மாம்ச பெலத்தைக் கொண்டு போராட முயற்சிக்கிறார்கள். அதின் முடிவு தோல்வியே. ஆனால் ஒரு மெய்யான விசுவாசியின் பலம் என்பது ஆவியான கடவுளை சார்ந்து காணப்படும்.
“நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம்” (1 தெச 5:8) என்று பவுல் சொல்லுகிறார். ஒரு மெய்யான கிறிஸ்தவனின் போராயுதங்கள் இதுவாகவே காணப்படுகின்றது. இந்த போராயுதங்களைத் தரித்துக்கொண்டுதான் நாமும் போராட வேண்டும். அவைகளை தரித்து நாம் வாழாவிட்டால், நாம் எளிதில் வீழ்ந்து போகிற நபராய்க் காணப்படுவோம். நம்முடைய பலம் ஒன்றுக்கும் உதவாது. ஆனால் கர்த்தரின் போராயுதங்கள் சகலத்தையும் ஜெயிக்கும். ஆகவேதான் பவுல்: “இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்” (2 கொரி 4:7) என்று சொல்லுகிறார். எந்த ஆயுதங்களைக் கொண்டு போராடுகிறாய்? சோதித்துப்பார்.