ஜூன் 20 

      “சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்” (2 கொரி 9:6).

      இந்த வசனமானது ஆவிக்குரிய வாழ்க்கை, சரீரப்பிரகாரமான வாழ்க்கை என இரண்டுக்கும் பொருந்துகிற ஒன்றாகக் காணப்படுகிறது. நாம் ஆவிக்குரிய வாழ்க்கையில், ஆவிக்கென்று சிறுக விதைக்கும்பொழுது நாம் பெறும் ஆவிக்குரிய நன்மைகளும்  சிறுகத்தான் இருக்கும். மாறாக ஆவிக்குரிய காரியங்களில் அதிக தேவ பயத்துடன் அதிக முக்கியத்துவம் கொடுத்து எறெடுக்கிற எல்லா பிரயாசங்களுக்கும் நமக்கு கிடைக்கும் பலன் பலமடங்கு என்பதில் சந்தேகமில்லை. ஆகவேதான் ‘பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்’. நாம் தேவனுடைய காரியங்களில் நம் பங்களிப்பைக் கொடுக்கும்பொழுது, நாம் தேவனுடைய சந்தோஷம், சமாதானத்தை பெற்று வாழுகிற வாழ்க்கையைக் கொண்டிருப்போம். இது எவ்வளவு உன்னதமான சிலாக்கியம்!

      அதைப்போலவே நாம் மாம்சப் பிரகாரமாக நம் காலங்களையும், நேரங்களையும் செலவிடும் பொழுது, அதற்குரிய பலனைப் பெறுவோம் என்பது உணமை. அதன் பலன் என்பது நித்திய வேதனை கொண்டதாகவும், மரண ஆக்கினை உடையதாகவும் காணப்படும். கர்த்தருடைய வார்த்தை உண்மையுள்ளது, மாறாதது. தேவனுடைய எச்சரிப்புக்கு நாம் பயப்படவேண்டும். ஆகவேதான் பவுல்: “மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான் தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான். நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்” (கலா 6:7) என்று சொல்லுகிறார். ஆவிக்கென்று நாம் விதைக்கும்பொழுது நமக்குக் கிடைக்கும் பலன் நித்திய ஜீவன். அன்பானவர்களே! நீ எதற்கென்று விதைத்துக் கொண்டிருக்கிறாய்?சிந்தித்து செயல்படு.