“இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, நீர் நீதியுள்ளவர்; ஆகையால் இந்நாளில் இருக்கிறதுபோல, நாங்கள் தப்பி மீந்திருக்கிறோம்; இதோ, நாங்கள் உமக்கு முன்பாகக் குற்றத்திற்குள்ளானவர்கள்; இதினிமித்தம் நாங்கள் உமக்கு முன்பாக நிற்கத்தக்கவர்கள் அல்ல என்று பிரார்த்தித்தேன்” (எஸ்றா 9:15).

எஸ்றா தேவனிடத்தில் ஜெபிக்கும்பொழுது அவன் சொன்ன முதலாவது காரியம் “ஆண்டவரே நீர் நீதியுள்ளவர்” என்று. இந்த தேவன் மெய்யாலுமே நீதியுள்ளவர். மேலும்  இரக்கத்தில் நீதியுள்ளவர் என்பதை எஸ்றா இங்கு நினைவுகூருகிறான். ஏனென்றால் கர்த்தர் நீதியின்படி இங்கு செயல்பட்டிருப்பார் என்றால், அவனும் அவன் ஜனங்களும் அழிக்கப்பட்டுப் போயிருக்க வேண்டும். ஆனால் இந்த இடத்தில் தேவன் இரக்கத்தின் நீதியைக் காட்டுகிறார். இரக்கமுள்ளவராக அவர் செயல்படுகிறார். அன்பின் நீதியை அவர் விளங்கப்பண்ணுகிறதை நாம் பார்க்கிறோம். அதனாலே நாம் தப்பி மீந்திருக்கிறோம். இல்லையென்றால் நாம் எப்போதோ அழிக்கப்பட்டிருப்போம். எஸ்றா மேலும் சொல்லும்பொழுது, இதோ, நாங்கள் உமக்கு முன்பாகக் குற்றத்திற்குள்ளானவர்கள்” என்று சொல்லுகிறதை நாம் பார்க்கிறோம். இஸ்ரவேல் மக்கள் பாபிலோன் தேசத்திலிருந்து திரும்பி வந்தபின்பு, அவர்களோடுகூட எஸ்றா ஜெபிக்கின்றான். மெய்யாலுமே அவர்கள் தேவனை அதிகமாக வேதனைப்படுத்தியவர்கள். ஆனாலும் அவர்களை தேவன் இரக்கத்தோடு கிருபையாய்க் கொண்டுவந்து எருசலேமில் சேர்த்தார். எஸ்றா ஜெபிக்கும்போது “நாங்கள் உமக்கு முன்பாக நிற்கத்தக்கவர்கள் அல்ல, ஆனாலும் நீர் உம்முடைய இரக்கத்தின்படியாக எங்களை இம்மட்டும் பிழைத்திருக்கச் செய்கிறீர்” என்று சொல்லுகிறான். நம்முடைய வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு நாளும் பிழைத்திருப்பது அவருடைய கிருபையே அல்லாமல் வேறொன்றுமில்லை. நம்முடைய நீதி ஒன்றுமில்லை. அவருடைய இரக்கத்தின் அளவிற்கு முடிவேயில்லை. அவருடைய அன்பு மிகப் பெரியது. ஆச்சரியமானது!