கிருபை சத்திய தின தியானம்
ஜனவரி 6 இமைப்பொழுதே கைவிட்டேன் ஏசாயா 54 : 1 – 10
‘இமைப்பொழுதே உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன்’ (ஏசாயா 54 : 7 )
இமைப்பொழுது என்பது எவ்வளவு நேரம் என்பதை யோசித்துப்பார். ஆனால் வெறுமனே தேவன் உன்னைக் கைவிடுவாரா? இல்லை. ஒருவேளை உன் பாவத்தினிமித்தம், தேவன் உன்னைக் கைவிடக்கூடும். நீ தேவனுடைய பாதுகாப்பை விளங்கிக்கொள்ள, தேவன் உனக்கு ஒரு ஆவிக்குரிய பாடத்தைக் கற்றுக்கொடுக்க, உன்னைக் கைவிடக்கூடும். ஆண்டவராகிய இயேசு தாமே பிதாவினால் கைவிடப்பட்டார். ‘என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்’ என்று பிதாவை நோக்கி குமாரன் கதறுகிறதைப் பார்க்கிறோம். ஒரு பக்தன் பாடுகிறான் ஏன் என்னைக் கைவிட்டீர்’ என்றுச் சொல்லி அடுத்த வரியில் ’என் கை பற்றவல்லவோ நீர் கைவிட்டீர்’ எவ்வளவு உண்மை இது. உன்னுடைய கைப்பற்ற, உன்னை உளையான சேற்றிலிருந்து தூக்கியெடுக்க, தேவக்குமாரனை பிதாவானவர் கைவிட்டார். எவ்வளவு மேலான அன்பு என்பதைப்பார்!
ஆனால் மெய்யான தேவப்பிள்ளைக்கு அது இமைப்பொழுதாயிருந்தாலும் அதைத் தாங்கிக்கொள்வது கடினமானது. தேவனுடைய அன்பையும், அவருடைய பிரசன்னத்தையும் அதிகம் உணர்ந்த ஒரு தேவ பிள்ளை அதை ஒருபோதும் விரும்பமாட்டான். அதற்கு பதிலாக தேவன் கைவிடுவதற்கு காரமணமாயிருந்ததை நீக்கிப்போடவே விரும்புவான். அது அவனுடைய பாவமாயிருந்தால் அதை நீக்கிப்போடவே பார்ப்பான். அறிக்கையிட்டு தேவனோடு ஒப்புரவாவான். நீ எப்பொழுதாகிலும் தேவன் உன்னைக் கைவிட்டதாக உணர்ந்திருக்கிறாயா? தேவன் உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வார். அவருடைய கோபம் ஒரு நிமிஷம். அவருடைய தயவோ நீடிய வாழ்வு ( சங் 30 : 5 ).
ஆகவே உன்னுடைய வாழ்க்கையிலும் தேவன் கைவிட்டதைப்போல உணருவாயானால், சோர்ந்துபோகாதே. அது இமைப்பொழுதுதான். ஆனாலும் ’உருக்கமான’ இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வார் என்பதில் இம்மியளவும் சந்தேகப்படாதே.