“நாங்கள் பராக்கிரமசாலிகளென்றும், நாங்கள் யுத்தசன்னத்தரென்றும் நீங்கள் சொல்லுகிறதென்ன?” (எரேமியா 48:14).

அருமையானவர்களே! நம்முடைய வாழ்க்கையில் நாம் யார் என்று தெளிவாய் அறியாமல் வாழக்கூடியவர்களாய் இருக்கிறோம். ஒரு மெய்யான தேவனுடைய பிள்ளை கர்த்தரை மாத்திரமே சார்ந்து வாழுவான். அவன் தன்னில் தானே பெலன் உள்ளவன் என்று சொல்ல முடியாது. மோவாப் மக்கள் இவ்விதமாய்ச் சொன்ன பொழுது, நடந்த காரியம் 15 -ஆம் வசனம் “மோவாப் அழிந்தது, அதின் பட்டணங்கள் எரிந்துபோயின; அதின் திறமையுள்ள வாலிபர் கொலைகளத்துக்கு இறங்குகிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள ராஜா சொல்லுகிறார்.” தேவாதி தேவனுக்கு முன்பாக நாம் தாழ்மையுள்ளவர்களாய் வாழுவதே நமக்குச் சிறந்த பாதுகாப்பு. அவர் தம்முடைய கிருபையினால் இம்மட்டும் தாங்கி வழிநடத்தி வருகிறார் என்பதை மறந்துவிடக் கூடாது. அநேக வேளைகளில் நாம் நம்மைக் குறித்து மேன்மையாக எண்ணுகிறோம். ஆவிக்குரிய பெருமையுள்ளவர்களாய்க் காணப்படுகிறோம். இது தேவனுக்கு ஏற்றதல்ல. அது நமது அழிவுக்கு ஏதுவாக அமைந்துவிடும். நாம் பெருமையுள்ளவர்களாய் மாறுவதற்கு வாய்ப்புண்டு என்பதை மறந்துவிடக் கூடாது. பெருமை எப்பொழுதும் நம்மை தேவனை விட்டுப் பிரிக்கிறது. ஆனால் தாழ்மையின் சிந்தை ஆண்டவருக்குப் பிரியமானது மாத்திரமல்ல, நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் நம்மைப் பாதுகாக்கிற ஒன்றாக இருக்கும். பெருமையை நாம் வெறுத்துத் தாழ்மையைத் தரித்துக்கொள்வோம். அது தேவனுக்கு உகந்தது. நம்முடைய வாழ்க்கைக்கும் அது மெய்யான பாதுகாப்பாய் இருக்கிறது.