“நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்” (எபேசியர் 5:30).
நம்முடைய வாழ்க்கையில் ஒருகாலத்தில் சாத்தனுக்குரியவர்களாகக் காணப்பட்டோம். ஆனால் இப்பொழுது நாம் கிறிஸ்துவின் பிள்ளைகள். அவருடைய சரீரத்தின் அவயவமாக மாற்றப்பட்டிருக்கிறோம். இது நம்மால் ஆனதல்ல. தேவன் இரக்கத்தோடும் கிருபையோடும் நம்முடைய வாழ்க்கையில் இதை ஏற்படுத்தியிருக்கிறார். ஆகவே நாம் அவருடைய சரீரத்தின் அவயவமாக இருக்கிறோம் என்று சொல்லும்பொழுது, அவருடைய சபையின் ஒரு பங்காக இருக்கிறோம். மேலும் அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம். நாம் கிறிஸ்துவுக்குள் முழுமையாய் இணைக்கப்பட்டிருக்கிறோம். என்ன ஒரு அருமையான மாற்றம்! இவ்விதமாய் நாம் மாற்றப்பட்டிருக்கும்பொழுது நாம் இன்னும் எவ்வாறு நம் மாம்சத்திற்கும் உலகத்திற்கும் உரியவர்களாக வாழ முடியும்? இல்லை. இந்த மகத்துவமான மாற்றத்திற்குரியவர்களாக நாம் வாழவும், சபையில் கிறிஸ்துவின் நாமம் மகிமைப்பட அவருடைய ராஜ்ஜியம் கட்டப்பட என்னால் அளிக்கக்கூடிய பங்களிப்பு என்ன என்பதையும் அறிந்து, தாழ்மையாய் அவருடைய பணியில் நாம் செயல்படும்படியாக நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோம். நமக்காக அல்ல நமக்காக மரித்து உயிர்த்தெழுந்தவருக்காக வாழ நியமிக்கப்பட்டிருக்கிறோம். இந்த வாழ்க்கைக் கடினமானதாக இல்லை. இது அன்பினால் ஏவப்படுகிற வாழ்க்கை. ஒருவேளை ஆண்டவர் என்னை இரட்சிக்காமல் இருந்திருப்பார் என்றால், நான் அழிந்துபோயிருப்பேன். ஆனால் என்னையும் தெரிந்து கொண்டு இரட்சித்து, விடுதலையும் சமாதானத்தையும் கொடுத்திருப்பார் என்றால், நான் அவருக்காக வாழுவதைப் போல் வேறொரு பெரிதான சிலாக்கியம் என்னவாக இருக்க முடியும்? இதுவே ஒரு கிறிஸ்தவனுடைய உண்மையான மனமகிழ்ச்சி. அவன் கிறிஸ்துவுக்குள் நிறைவாய்க் காணப்படுவான். பரிபூரணமும் அடைவான்.