“நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது” (ஏசாயா 64:6).

தேவனை அறியாத ஒரு மனிதனுடைய நிலையைக் குறித்து நாம் எண்ணிப்பார்க்கும்பொழுது அது எவ்வளவு பயங்கரமானது என்பதை நாம் பார்க்கிறோம். தேவனுக்கு முன்பாக நாம் சுத்திகரிக்கப்படாத தீட்டானவர்களாய் இருக்கிறோம். ஆண்டவர் நமக்காக மீட்பின் வழியை செய்துமுடித்தும், நம்முடைய பாவங்கள் கழுவப்படாமல் வாழுகிற வாழ்க்கை என்பது தேவனுக்கு முன்பாக அருவருப்பாய் காணப்படுகிறது. நம்முடைய நீதி தேவனுக்கு முன்பாக அழுக்கானக் கந்தையைப் போல இருக்கிறது. நாம் இலைகளைப் போல் உதிருகிறோம். இது தேவனுடைய சமாதானத்தை நம்முடைய வாழ்க்கையில் பெற்றுக்கொள்ளும்படியான சிலாக்கியம் இருந்தும் அதை நாம் அலட்சியப்படுத்தும்படியான வாழ்க்கையின் நிலையைக் காண்பிக்கிறது. ஒரு இலை தான் விரும்பினாலும், அது ஸ்திரத்தன்மை இல்லாதனிமித்தமாக, காற்று எந்த திசையில் கொண்டுச் செல்கிறதோ அந்த திசையில் அது போகிறதாய் இருக்கிறது. அநேகருடைய வாழ்க்கையில் அவருடைய அக்கிரமங்களினால் அந்த இலையைப் போலவே இருக்கிறார்கள். இது மிக வேதனையானக் காரியம். நீங்களும் உங்கள் வாழ்க்கையைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பது நல்லது. ஒரு நிலையான ஆவிக்குரிய சமாதானமுள்ள வாழ்க்கை உங்களில் காணப்படுகிறதா? இல்லையென்றால் தேவனிடத்தில் திரும்புவோம். அவன் மன்னிக்கிறதிற்கு தயைப் பெருத்தவர். நமக்கு உறுதியான வாழ்க்கையைத் தருவார்.