நவம்பர் 4
“இஸ்ரவேலே, மகிழ்ச்சியாயிராதே; மற்ற ஜனங்களைப்போல் களிகூராதே; உன் தேவனைவிட்டு நீ சோரம்போனாய்; தானியம் போரடிக்கிற சகல களங்களிலும் பணையத்தை நாடுகிறாய்” (ஓசியா 9:1).
இஸ்ரவேல் தேசம் தேவனை விட்டு விலகிப் போனது. தன்னுடைய சொந்த பெலத்தினால் தன் வாழ்க்கையைக் கட்டிக்கொள்ள முடியும் என்று எண்ணிற்று. ஒருவேளை நீங்களும் தேவனில்லாமல் உங்கள் வாழ்க்கையைக் கட்டிக்கொள்ளப் பிரயாசப்படுவீர்கள் என்றால், இவ்விதமாகக் காணப்படுவீர்கள். “நாங்கள் எங்கள் பலத்தினாலே எங்களுக்குக் கொம்புகளை உண்டாக்கிக்கொள்ளவில்லையோ என்று சொல்லி, வீண்காரியத்தில் மகிழுகிறார்கள்” (ஆமோஸ் 6:13). உன்னுடைய விருப்பம், சித்தம், வாஞ்சை எல்லாமே வீண் காரியங்களில் தான் காணப்படும்.
“பகற்காலத்திலே உன் நாற்றை வளரவும், விடியற்காலத்திலே உன் விதையை முளைக்கவும் பண்ணினாலும், பலனைச் சேர்க்கும் நாளிலே துக்கமும் கடும்வேதனையுமே உங்கள் அறுப்பாயிருக்கும்” (ஏசாயா 17:11) என்று தேவன் எச்சரிக்கிறார். உன் வாழ்க்கையில் நீ எவ்விதம் வாழ்ந்து கொண்டிருக்கிறாய்? கர்த்தருடையை காரியங்களில் உன்னுடைய விருப்பங்களும், நேரங்களும் காணப்படுகிறதா? அல்லது உலகமும் அதின் ஆசை இச்சைகளுமே உன் விருப்பமா? உலகத்தின் மேல் உன் ஆசை என்றால், “என் நேசர்கள் எனக்குக் கொடுத்த பணையம் என்று அவள் சொன்ன அவளுடைய திராட்சச்செடிகளையும், அவளுடைய அத்திமரங்களையும் நான் பாழாக்கி, அவைகளைக் காடாய்ப்போகப்பண்ணுவேன்; காட்டுமிருகங்கள் அவைகளைத் தின்னும்” (ஓசியா 2:12) என்று கர்த்தர் சொல்லுகிறார்.
உன்னுடைய பிரயாசத்தை வீணாய்ப் போக விட்டுவிடாதே. நீ எதற்கென்று விதைக்கின்றாயோ, அதை அறுக்கவேண்டும். கர்த்தருடைய காரியங்களில் உன்னை உட்படுத்திக்கொள். அதுவே உனக்கு பாதுகாப்பும், நன்மையுமாம். இல்லையென்றால் பொல்லாங்கன் உன்னை சொந்தமாக்கிக் கொள்ளுவான். அதின் முடிவு நீ அறிந்ததே. காலங்களை வீணாக்காதே, இப்பொழுதே உன்னைத் தாழ்த்தி மனந்திரும்பு.