கிருபை சத்திய தின தியானம்

அக்டோபர் 17             எச்சரிப்பு        1 இராஜா 8 : 22 -33

“என் தேவனாகிய கர்த்தாவே, உமது அடியேன் இன்று

உமது சந்நிதியில் செய்கிற விண்ணப்பத்தையும், மன்றாட்டையும் கேட்டு

உமது அடியேனுடைய விண்ணப்பத்தையும், வேண்டுதலையும்

திருவுளத்தில் கொண்டருளும்” (1 இராஜா 8:28)

     சாலமோன் ராஜாவின் வாழ்க்கை ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் ஒரு பெரிய எச்சரிப்பை எப்போதும் கொடுக்கிறது. ஆம்! அவன் தேவனுக்கென்று உன்னதமான ஆலயத்தைக் கட்டினான். ஆலயத்தைக் கட்டினதோடு மட்டுமல்ல மிக உன்னதமான ஜெபத்தை அதில் செய்தான். தன்னை அடியேன் என்று தாழ்த்தி ஜெபித்தான். அவன் ஜெபித்த ஜெபம் 1 இராஜாக்கள் 8ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. எவ்வளவு உன்னதமான ஜெபத்தைச் செய்தான் பாருங்கள்! மேலும், தேவன் அவனிடத்தில் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டபொழுது பொன்னையும் பொருளையும் கேட்காமல் ஞானத்தைக் கேட்டான். இவ்வளவு உன்னத  ஆவிக்குரிய வாழ்க்கையைக் கொண்டிருந்த சாலோமோன் பிற்காலத்தில் வழிவிலகி போனான் . 1 இராஜாக்கள் 11ம் அதிகாரத்தில் அவனுடைய வீழ்ச்சியைப் பற்றி சொல்லப் பட்டிருக்கிறது. அவன் இருதயம் ஸ்திரீகளின் மேலும், விக்கிரகங்களின் பின் சென்றது.

    உன்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கையைக் குறித்து  ஒவ்வொரு நாளும் நீ எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். நேற்றைய பக்தியின் மேல் இன்று உன் கோட்டையைக் கட்டாதே. ஒவ்வொரு நாளும் உன் இருதயத்தை ஜாக்கிரதையாய்க் காத்துக்கொள்ளவேண்டும். முடிவுபரியந்தம் அவ்விதமாகவே விழிப்போடு ஜீவிக்கவேண்டும். “இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்” (1கொரி 10:12). என்று வேதம் எச்சரிக்கிறது. ஆகவேதான் ஒவ்வொரு நாளும் வேதத்தை வாசிப்பதிலும், ஜெபிப்பதிலும் ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும். இவைகளில் கருத்தாய் இரு. இவைகளை அசட்டை செய்கிற எந்த ஒரு விசுவாசியும் அவனது ஆவிக்குரிய வாழ்க்கையில் பின்னடைவான் என்பதில் சந்தேகமில்லை. மேலும் அவ்விதமானவன் பிசாசுக்குத் தன் வீட்டு வாசலைத் திறந்து விடுகிறான். அது மிகவும் ஆபத்தானது.