மே 3       

        “லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்” (லூக்கா 17:32).

வேதத்தில் நாம் திருஷ்டாந்தமாக வைக்கப்பட்ட மனிதர்களைக் குறித்து வாசிக்கிறோம். நல்ல முன்மாதிரியாக, அவர்களைப்  பின்பற்றக்கூடிய அருமையான சாட்சிகளை  வைத்து விட்டு போனவர்கள் உண்டு. அதே விதமாக நம்மை எச்சரிப்பதாகவும், நாம் பின்பற்ற கூடாத கெட்ட முன்மாதிரியை வைத்து போனவர்களும் உண்டு. இந்த இடத்தில் ஆண்டவர் ஏன் லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லுகிறார்? லோத்தின் மனைவியைப்  போல நீங்கள் இருக்காதீர்கள் என்பதை நினைவுபடுத்தும்படியாக ஆண்டவர் சொல்லுகிறார். லோத்தின் மனைவி தன்னுடைய கணவனோடு, ஆபிரகாமுடன் வாழ்ந்த நாட்களில் நிச்சயமாக ஆண்டவரை குறித்து அறிந்திருப்பாள். தன்னுடைய பிள்ளைகளை ஆண்டவருக்கு பயப்படுகிற பயத்தில் வளர்க்கத்  தவறிப்போனாள். சோதோமின் பழக்கவழக்கங்களில் அவள் தங்களுடைய பிள்ளைகள் வளரும்படியாக விட்டுவிட்டாள். அவள் இருதயம் சோதோமில் நிலைத்திருந்தது. ஆண்டவர் அவர்களைத்  தப்புவிக்கும் படியாக முயற்சித்த வேளையில் அவள் சோதோமை விட்டு வெளியே வர விரும்பவில்லை.

அநேகருடைய வாழ்க்கையில் இந்த உலகத்திலிருந்து வெளிவரும்படியாக அவர்கள் விரும்புவதில்லை. இந்த இடத்தில் லோத்தின் மனைவியின் முடிவை நாம் பார்க்கும்பொழுது எச்சரிப்பு அடைய வேண்டிய மிகப்பெரிய ஒரு அவசியத்தை உணர்கிறோம். அவளை தேவதூதன் தப்பிக்கச் செய்த பிரயாசங்கள்  எல்லாவற்றையும் மறுத்துவிட்டாள். அவள் உள்ளம் சோதோமை விட்டுப்  பிரிய முடியவில்லை. உலகத்தை விட்டுப்  பிரிக்கப்பட முடியாத அளவுக்கு ஒன்றோடு ஒன்று இணைந்ததாக இருக்கிறது. ஒருவேளை உங்களுடைய இருதயம் இவ்விதமாக இருக்கிறதா என்பதை குறித்து சிந்தித்துப் பாருங்கள். கடைசியில் அவள் முடிவை எண்ணிப் பார்க்கும் பொழுது மிகுந்த பரிதாபமான ஒரு முடிவைச்  சந்தித்து, வாழ்க்கையில் ஒரு துயரமான முன்மாதிரியை வைத்து விட்டுப்போனாள். “அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள்” (ஆதி 19:26) என்று சொல்லப்படுகிறது. நம்முடைய வாழ்க்கையில் இந்த ஒரு கெட்ட முன்மாதிரியை நாம் பார்க்கும் பொழுது எச்சரிப்படைவோமாக. அவளுடைய முடிவை ஒருவரும் சந்திக்க கூடாதபடிக்கு கர்த்தர் நம்மை காப்பாராக.