கிருபை சத்திய தின தியானம்

ஜூலை 4                      விசுவாசித்து நடத்தல்            2 கொரிந் 5 : 1 – 10

நாம் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடக்கிறோம்(2கொரி 5:6)

     ஒரு கிறிஸ்தவன் தரிசித்து நடப்பவனல்ல. அதாவது காண்கிறவைகளைச் சார்ந்து நடவாமல், விசுவாசத்தின் அடிப்படையில் நடக்கிறவன். அவர்கள் குறுகிய பார்வையுள்ளவர்களாய் இந்த உலகத்தில் காண்கிறவைகளையே சார்ந்து நடக்கிறவர்கள்,  இதற்காகவே ஜீவிக்கிறவர்கள். அவர்களுடைய நோக்கம், திட்டம், குறிக்கோள் அனைத்தும் இந்த உலகத்தையும், உலகத்து மக்களைச் சார்ந்து செயல்படுகிறவர்களாய் இருக்கும். ஆகவே அவர்கள்  இந்த உலகத்தின் செல்வம், புகழ், மேன்மை இவைகளை நான் எப்படி அடைவது? இவைகளைபெற நான் முழுமையாக உழைப்பேன் என்று தீர்மானமாக வாழ்வார்கள்.

     ஆனால் ஒரு கிறிஸ்தவன் இந்த உலகத்தைச் சார்ந்தவனல்ல, தேவனைச்  சார்ந்து வாழுபவன். அவன் எண்ணம், திட்டம்,  நோக்கம், செயல் யாவும் தேவனுக்குகேற்றதாக இருக்கும். அவன் இந்த உலகத்தைப் பிரதானமாக சார்ந்தவனல்ல, நித்திய ராஜ்ஜியமான பரலோகத்தைச் சார்ந்தே வாழுபவன். அவனுடைய பொக்கிஷம் எங்கேயோ அங்கேயே அவனுடைய இருதயம் இருக்கும். மத்தேயு 14ம் அதிகாரத்தில் பேதுரு ஆண்டவராகிய இயேசுவை நோக்கி ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான். அதற்கு அவர்: ‘வா’ என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி இயேசுவினிடத்தில் போக ஜலத்தின்மேல் நடந்தான். (மத்தேயு 14 : 28, 29) இயேசுவின் பேரில், அவர் சொன்ன வார்த்தையின் பேரில் சார்ந்து பேதுரு தண்ணீரின்மேல் நடந்தான்.

      இதுவே விசுவாசித்து நடப்பது. நாம் ஆண்டவராகிய இயேசுவை நோக்கி, வேத சத்தியங்களை முழுமையாய் நம்பி அதின் அடிப்படையில் நடக்கும்போது அது விசுவாசத்தின் நடை. ஆனால் அதே பேதுரு தரிசித்து நடக்க ஆரம்பித்தவுடன் என்ன நடக்கிறது பாருங்கள். காற்று பலமாயிருக்கிறதைக்கண்டு, பயந்து அமிழ்ந்துப்போக ஆரம்பித்தான். தரிசித்து நடப்பது உன்னைக் கீழே கொண்டு செல்லும். தரிசித்து நடப்பவன்  எப்போதும் மேலே உயரமுடியாது. விசுவாசித்து நடப்பவனின் பார்வை எப்போதும் மேல் நோக்கியே இருக்கும்.