ஜனவரி 30                  ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள்          கலாத்தியர் 5:16-26

“நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால்,

ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம்” (கலாத்தியர் 5:25).

      ஒவ்வொரு மெய் கிறிஸ்தவனும் ஆவியில் பிழைக்கிறவனாகக் காணப்படுகிறான். இந்த உலகத்தில் பிறப்பவர்கள் மாம்சத்தில் பிழைத்திருக்கிறார்கள். ஆகவே அவர்கள் மாம்சத்திற்கு ஏற்றபடி வாழ்கிறார்கள். ஆனால் ஆவியினால் மறுபடியும் பிறந்த மனிதன் ஆவிக்கேற்ற பிரகாரமாக நடந்து கொள்ளுகிறான். அவன் இரட்சிக்கப்படாததிற்கு முன்பு அவனுடைய ஆத்துமா மரித்த நிலையில் இருந்தது. பாவம் செய்யும் பொழுது நீ சாகவே சாவாய் என்று ஆதாமிடத்தில் தேவன் சொன்னது நிறைவேறிற்று. அப்பொழுது மனிதனுடைய ஆத்துமா மரித்தது. ஆனால் தேவன் தம் கிருபையினால் மீண்டுமாக ஜீவ சுவாசத்தை நம் ஆத்துமாவில் ஊதும் பொழுது நம் ஆத்துமா உயிரடைகிறது.

      நம் வாழ்க்கையில் மாம்சத்திற்கு ஏற்ற வழிகளில் நடக்காமல், ஆவிக்குரிய வழிகளில் நடக்கும்படியாக கற்றுக்கொள்வோமாக. நாம் ஆவியினால் பிறந்திருப்பதற்கு அடையாளம் என்னவெனில் நாம் ஆவிக்கேற்ற பிரகாரமான வாழ்க்கை வாழுவதில்தான் இருக்கிறது. அது தேவனுடைய பரிசுத்த ஆளுகையின் செயலாகவும் இருக்கிறது. நாம் மாம்சத்திற்குரிய காரியங்களைச் செய்துகொண்டு அதன்படி வாழுகிறவர்களாகக் காணப்படுவோமானால் இன்னும் நம் ஆத்துமா உயிர்ப்பிக்கப்படவில்லை என்பதுதான் பொருள். நம் ஆத்துமா உயிர்ப்பிக்கப்பட்டால் சரீரமும் அதனோடு கூட இணைந்து ஆவிக்கேற்ற பிரகாரமாக நடந்துகொள்ளும். “கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே” (ரோமர் 8:2) என்று பவுல் சொல்லுகிறார். மாம்சத்திற்கு ஏற்றபடி வாழுகிற வாழ்க்கை நித்திய மரணத்தின் அடையாளம். ஆவிக்கேற்றப்படி வாழுகிற வாழ்க்கை பாவத்தின் விடுதலையின் அடையாளமாகும்.