ஜனவரி 23                         ஜெபத்தில் விழித்திருங்கள்                  கொலோ 4:1-6

“இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன்

ஜெபத்தில் விழித்திருங்கள்” (கொலோ 4:2).

      நாம் தேவனுடைய பிரசன்னத்தில் இருக்கிறோம் என்கிற உணர்வோடு வாழுவதே இடைவிடாமல் ஜெபிப்பதின் ஒரு அங்கமாக இருக்கிறது. எல்லா சமயங்களிலும் நம்முடைய நாவின் வார்த்தைகளால் ஜெபிக்கவில்லையென்றாலும் கர்த்தர் நம்மோடு இருக்கிறார் என்கிற உணர்வு இடைவிடாமல் நம்மில் இருப்பதே ஜெபத்தின் ஒரு பகுதியாகக் காணப்படுகிறது. இடைவிடாமல் ஜெபிக்கிற மனநிலையோடு வாழும்பொழுது நன்றி உணர்வு உள்ளவர்களாக நாம் வாழவேண்டும். கர்த்தர் நமக்குச் செய்திருக்கிற முடிவில்லாத நன்மைகளுக்காகவும், இரட்சிப்பை நமக்கு ஈவாக அருளினதற்காகவும் நன்றியுள்ளவர்களாக ஜெபங்களை ஏறெடுக்க வேண்டும். கர்த்தர் கிருபையினால் நம்மை இரட்சிக்கிறார், கிருபையினால் நம்மைப் பாதுகாத்துவருகிறார் என்கிற உண்மையை நாம் அறிந்துக்கொள்ளவேண்டும். கிருபையின் ஆளுகை நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலைப்பாடிலும் இருக்கிறது. ஆகவே தேவனுடைய கிருபையை நினைவுகூர்ந்து எப்பொழுதும் நன்றிகளை ஏறெடுக்க வேண்டும்.

      மேலும் நமக்கு முன்பாக இருக்கும் காரியங்களுக்காகவும், சூழ்நிலைகளுக்காகவும் தேவனுடைய சித்தத்தின்படி ஜெபிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். ஆண்டவராகிய இயேசு நம்மை சோதனைக்கு உட்படாதபடிக்கு ஜெபிக்க கட்டளையிட்டுள்ளார் (மத் 6:13). நாம் அநேக சமயங்களில் கருத்தோடும், விழிப்போடும் ஜாக்கிரதையாக ஜெபிக்கத் தவறிவிடுகிறோம். அநேக காரியங்களினால் கவலைப்பட்டுக்கொண்டு ஜெபிக்க மறுக்கிறோம். ஆனால் தேவன், “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்” (பிலி 4:6) என்று சொல்லுகிறார். நாம் கவலைப்படும் பொழுது தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிய மறுக்கிறோம். துன்பங்கள் மத்தியிலும் ஜெபத்துடன் தேவனிடத்தில் சேரக்கடவோம்.