“என் பெலனும் நான் கர்த்தருக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோயிற்று என்றேன்” புலம்பல் 3:18

      இஸ்ரவேல் மக்கள் பாவம் செய்து தேவனுடைய வழியை விட்டு விலகினபொழுது,  பாபிலோன் தேசத்துக்கு அடிமைகளாய் கொண்டு போகப்பட்டார்கள். அப்போது எரேமியா தீர்க்கதரிசி தன்னுடைய ஜனங்களுக்காக இந்த புலம்பலைப் பாடினார். இந்த வசனத்தின் மையக்கருத்து ‘கர்த்தருக்கு காத்திருத்தல்’. அது அழிந்து போகுமா? கர்த்தருக்கு காத்திருந்தல் ஒருக்காலும் அழிந்து போகாது. கர்த்தர் தம்முடைய மக்களை பெலப்படுத்துகிறவர். இது அநேக சமயங்களில் நமக்கு ஏற்படுகிற அவநம்பிக்கையின் பிரதிபலிப்பாக இருக்கிறது. தேவன் தம்முடைய மக்களை ஒருநாளும் விட்டுவிடமாட்டார். தாவீது சோர்ந்து போன வேளையில் இவ்விதமாகச் சொல்லுகிறார், “பின்பு தாவீது: நான் எந்த நாளிலாகிலும் ஒரு நாள் சவுலின் கையினால் மடிந்துபோவேன்; இனிச் சவுல் இஸ்ரவேலின் எல்லைகளில் எங்கேயாவது என்னைக் கண்டுபிடிக்கலாம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகும்படிக்கும், நான் அவன் கைக்கு நீங்கலாயிருக்கும்படிக்கும், நான் பெலிஸ்தரின் தேசத்திற்குப் போய், தப்பித்துக்கொள்வதைப்பார்க்கிலும் நலமான காரியம் வேறில்லை என்று தன் இருதயத்தில் யோசித்தான்” (1 சாமு 27:1). ஆனாலும் மெய்யாலும் தேவன் சவுலின் கையினால் தாவீது மடிந்து போகும் படியாக விட்டுவிட்டாரா? இல்லை. அநேக சமயங்களில் நாம் நம்முடைய அவிசுவாசத்தினாலும், பயத்தினாலும் பலவிதங்களில் எதிர்மறையாக  சிந்திக்கிறோம். கர்த்தர் ஒருக்காலும் தம்முடைய மக்களைக் கைவிடமாட்டார். “எந்த மனுஷனும் பொய்யன் என்று என் மனக்கலக்கத்திலே சொன்னேன்” (சங் 116:11) என்று சங்கீதக்காரன் சொல்லுகிறான். மனக்கலக்கம் என்பது நம்முடைய வாழ்க்கையில் ஏற்படுகிற காரியம். ஆனால் எந்த மனுஷனும் பொய்யன் என்பது உண்மை. ஆனால் தேவனை நோக்கிப் பார்க்கும் பொழுது நாம் மனக்கலக்கத்தில் உட்பிரவேசிக்க அவசியமில்லை. அவர் உறுதியானவரும் உத்தமமானவரும் தம்முடைய காரியங்களை நிறைவேற்றுவதில் ஒரு காலமும் தவறியதில்லை. நம்முடைய நம்பிக்கையும் வீண் போகாது.