“இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே” (லூக்கா 7:47).

பெரும்பாலான கிறிஸ்தவர்களின் வாழ்க்கையில் நான் மோட்சம் போக வேண்டும், எனக்கு ஆசீர்வாதம் வேண்டும் என்ற இவ்விதமான எண்ணங்கள் அதிகமாக இருப்பதை நாம் பார்க்கிறோம். ஆனாலும் இவ்வளவாய் என்னில் அன்பு கூர்ந்த தேவனில் நானும் அன்புகூர வேண்டும் என்கிற உணர்வு அநேகரில் இருப்பதை நாம் பார்க்க முடிவதில்லை. ஆனால் வேதத்தில் சொல்லப்பட்டிருகின்ற பிரதான கற்பனை, “தேவனிடத்தில் உன் முழு இருதயதோடும், முழு பெலத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும் அன்புகூருவாயாக” என்பதே. அநேகர் தங்களுடைய வாழ்க்கையில் தங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்பதை உணர்ந்தவர்களும் தேவனிடத்தில் அன்புகூருவதில்லை என்று சொல்லும்பொழுது, இதுவும் ஒரு சுயநலமான வாழ்க்கையே என்பதாகக் காணப்படுகிறது. ஆனால் மெய்யாலுமே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பாடுகளை உண்மையாய் உணர்ந்து அறிந்து விளங்கிக்கொள்ளும்பொழுது மாத்திரமே நம்முடைய வாழ்க்கையில் அவரிடத்தில் அன்புகூர முடியும். இந்தப் பாவியான ஸ்திரி அவளுடைய வாழ்க்கையில் அதிகமாக மற்றவர்களால் வெறுக்கப்பட்டவள், புறக்கணிக்கப்பட்டவள். அநேக பாவங்கள் செய்த இந்த ஸ்திரி, அவளுடைய அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டபொழுது, தேவனுக்கு உண்மையாலுமே நன்றியுள்ளவளாக தன்னை வெளிப்படுத்துகிறதைப் பார்க்கிறோம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் “எவனுக்கு கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ அவன் கொஞ்சமாய் அன்புகூருவான் என்று சொல்லி, அவளை நோக்கி உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்.” நம்முடைய வாழ்க்கையில் எந்தளவுக்கு நான் ஒரு பாவி என்று உணர்கின்றேனோ அந்தளவுக்கு என்னுடைய பாவங்கள் எவ்வளவு கொடியது என்பதை விளங்கிக்கொள்ள முடியும். அநேகர் தான் ஒரு பாவி என்று உணர முடியாததினால் தேவன் தங்களுக்கு மன்னித்த திரளான பாவங்களைக் குறித்து அவர்கள் எண்ணுவதில்லை. ஆனால் இந்த ஸ்திரி தன்னுடைய அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்ட பொழுது தேவனில் மிகவும் அன்புகூர்ந்தாள். தேவனில் அன்புகூருவதே நமக்குக் கொடுக்கப்பட்டப் பிரதான கட்டளை.