கிருபை சத்திய தின தியானம்

செப்டம்பர் 16             வேத உபதேசங்கள்             சங்கீதம் 94:12-23

 உம்முடைய வேதத்தைக் கொண்டு

போதிக்கிற மனுஷன் பாக்கியவான்‘ (சங் 94:13)

 

    அதாவது உம்முடைய வேதத்தின்மூலம் போதிக்கப்படுகிற மனுஷன் ஆசீர்வதிக்கப்பட்டவன். என்றைக்கும் இல்லாத அளவில் இன்று வேதத்தின் போதனைக்கு ஆபத்து காணப்படுகிறது. அநேக ஆவிக்குரிய கூட்டங்களில் வேதத்தை மையமாக வைத்து போதிப்பது மிகவும் அரிதாகிவிட்டது. கிறிஸ்தவ மக்களும் அதை விரும்புவதில்லை, போதகர்களும் அவ்விதம் போதிப்பதில்லை. ஆனால் அப்போஸ்தலனாகிய பவுல் ஊழியக்காரனாகிய தீமோத்தேயுவுக்கு என்ன சொல்லுகிறார்?ஜாக்கிரதையாய் திருவசனத்தை பிரசங்கம் பண்ணு‘ (2தீமோ 4:2) இன்றைய பிரசங்கங்களில் உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் கதைகளும், கட்டுக்கதைகளும் கேளிக்கைகளும், பரியாசங்களும், கூத்தும், ஆர்ப்பரிப்பும், ஆரவாரமும் காணப்படுகிறதே ஒழிய உண்மையான வேத போதனை காணப்படுவதில்லை. உன்மையிலேயே நாம் கர்த்தருடைய வார்த்தையின் பஞ்சகாலங்களில் வாழ்கிறோம் இன்றைய ஆவிக்குரிய கூட்டங்கள் என்று அழைக்கப்படுகிற கூட்டங்களுக்கு வேதாகமம் எடுத்துச் செல்லவேண்டிய அவசியமில்லை. வேத சத்தியத்திற்குக் கொடுக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் அக்கூட்டங்களில் இல்லாததுதான் காரணம்.

    ‘ஆசாரியரிடத்தில் வேதமும், தீர்கத்தரிசியினிடத்திலே வசனமும் ஒழிந்துபோவதில்லை‘ (எரேமியா 18:18) என்று வேதம் சொல்லுகிறது. ஆனால் இன்று இவைகள் ஒழிந்துபோன ஊழியர்கள் மலிந்து கிடக்கிறார்கள். அப்படியானால் இவர்கள் யார்? கள்ளப்போதகர்கள், சிலுவைக்குப் பகைஞர்கள்.

    ஆனால் எந்த ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையை வேதத்தின் அடிப்படையில் அமைத்து அதில் வழிநடத்தப்படுகிறானோ, அவன், மெய்யாலுமே ஆசீர்வதிக்கப்பட்டவன். அவன், வழி தவறான். உன்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கை தேவனுடைய சத்தியமாகிய கன்மலையின்மேல் கட்டின வீட்டிற்கு ஒப்பாயிருக்கிறதா? அல்லது வெறுமையான உணர்ச்சிகள், போலி ஆரவாரங்கள்மேல் கட்டப்பட்டிருகிறதா? போலி நிலைத்திராது. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்.