நவம்பர் 28                           

வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும்ஒருவர்மேல் ஒருவர்  பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம்” (கலா 5:26)

      தேவனுடைய பிள்ளை வீண் புகழ்சியை விரும்பக்கூடாது. இன்றைக்கு மனிதர்கள், மற்றவர்கள் தன்னை புகழவேண்டும் என்று புகழ்ச்சியை நாடி அநேகக் காரியங்களைச் செய்கிறார்கள். பணம் பொருள்களையும், நேரங்களையும் அதற்காக செலவிடுகிறார்கள். ஆனால் இவை வீண், பிரயோஜனமற்றது. நித்தியத்திற்கு ஏதுவான காரியங்கள் அல்ல. நீங்கள் ஒருக்காலும் இதை விரும்பாதீர்கள். இவைகளை விரும்பி தேடுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது?  அவன் உயிரோடிருக்கையில் தன் ஆத்துமாவை வாழ்த்தினாலும்: நீ உனக்கு நன்மையை நாடினாய் என்றும் மனுஷர் காணாத தன் பிதாக்களின் சந்ததியைச் சேருவான். கனம் பொருந்தினவனாயிருந்தும் அறிவில்லாத மனுஷன் அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான். ( ங் 49:20).

   மேலும் அவர்களுடைய மகிமையை இலச்சையாக மாறப்பண்ணுவேன் (ஓசியா 4:7) அதாவது புகழ்ச்சியை வெட்கத்துக்குட்படுத்துவேன் என்று தேவன் சொல்லுகிறார். அருமையானவர்களே! இந்த உலகத்தில் எதை உயர்வாய், மேன்மையாய் எண்ணித் தேடினாயோ அதுவே உன்னை வெட்கமடையச் செய்யும். 1 பேதுரு 1:24 ல் என்ன சொல்லப்படுகிறது? மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், மனுஷருடைய மகிமை யெல்லாம் (புகழ்) புல்லின் பூவைப் போலவுமிருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது

    இயேசு கிறிஸ்து ஒரு கேள்வியைக் கேட்கிறார். தேவனாலே வரும் மகிமையை (புகழ்ச்சியை) தேடாமல் ஒருவரிலொருவர் மகிமையை (புகழ்ச்சியை)  ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்? மெய்யான விசுவாசி, மனிதனின் புகழ்ச்சியை தேடமாட்டான். தேவனால் வரும் புகழ்ச்சியை வாஞ்சிப்பான். அதற்காகவே ஜீவிப்பான். நம்முடைய வாழ்க்கையில் என்றென்றும் நிலைத்திருக்கிற தேவப்புகழ்ச்சியைத் தேடுவோமானால்  நாம்  வெட்கமடைய மாட்டோம்.