“சொப்பனங்கண்டேன், சொப்பனங்கண்டேன் என்று, என் நாமத்தைச் சொல்லிப் பொய்த்தீர்க்கதரிசனம் உரைக்கிற தீர்க்கதரிசிகள் சொல்லுகிறதைக் கேட்டேன்” (எரேமியா 23:25).

அருமையானவர்களே இன்றைக்கு அநேகர் சொப்பனத்தைத் தீர்க்கதரிசனம் என்று எடுத்துக்கொள்ளுகிறவர்களும் உண்டு. இதைக் கொண்டுப் பல விதங்களில் தாங்கள் வஞ்சிக்கப்படுகிறதுமல்லாமல், மற்றவர்களையும் வஞ்சிக்கிறார்கள் என்பதை நாம் எண்ணிப்பார்க்கும்பொழுது மிகுந்த வருத்தமான காரியமாக இருக்கிறது. இதைக் குறித்து தேவனுடைய வசனம் என்ன சொல்லுகிறது? இவர்கள் தங்கள் இருதயத்தின் வஞ்சகத்தையே தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறவர்கள். நம்முடைய வாழ்க்கையில் தேவ வசனம் நமக்கு இருக்கும்பொழுது, நாம் தீர்க்கதரிசனம் என்று சொல்லப்படுகிற அவ்விதமானக் காரியங்களை நம்பி ஏமாந்துப் போகாதபடிக்குக் கர்த்தர் நமக்கு கிருபைச் செய்வாராக. இந்த உலகத்தில் எல்லாவற்றைப் பார்க்கிலும் ஆவிக்குரிய ஏமாற்றம் என்பது மிக பயங்கரமான ஒருக் காரியம். ஆனால் இன்றைக்கு அநேகர் பொய்யான தீர்க்கதரிசிகள் பொய்யான ஊழியக்காரார்கள் மூலமாக வஞ்சிக்கப்பட்டு ஏமாற்றப்படுவது மிகப் பயங்கரமான ஒன்றாக இருக்கிறது. “அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்” (2 பேதுரு 1:19). தேவனுடைய வார்த்தையை நாம் பற்றிக்கொள்ளுவோம். அதைத் தவிர வேறொன்றையும் நாம் நம்பி ஏமாந்துப் போகாத படிக்கு கர்த்தர் நம்மைக் காத்துக்கொள்வராக.