“புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து, காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்” (கொலோசெயர் 4:5).

நம் கிறிஸ்தவ வாழ்க்கையில் காலத்தை எவ்விதமாக செலவிடுகிறோம் என்பது முக்கியமானது. காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள் என்று வேதம் சொல்லுகிறது. “ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்” (எபேசியர் 5:15-16). அநேக வேளைகளில் நாம் நேரத்தின் விலைமதிப்பதை உணராமல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால் ஒரு நாள் அதைக் குறித்து வருத்தப்படுகிறவர்களாக இருப்போம் என்பதை மறந்துவிடக் கூடாது. “நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப்பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது. இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று; ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம்” (ரோமர் 13:11-12). நம்முடைய நேரத்தை நாம் எவ்விதமாய் பிரயோஜனப்படுத்துகிறோம் என்பதை சிந்திக்க வேண்டும். “பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது” (யோவான் 9:4). நமக்குக் கொடுக்கப்படுகின்ற நேரத்தை நாம் சரியாகப் பிரயோஜனப்படுத்திக்கொள்வோம் என்றால் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை நாம் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் நாம் சரியான விதத்தில் பிரயோஜனபடுத்திக்கொள்ளாமல் சோம்பலுக்கு இடம்கொடுக்கும்போது அது நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைகு ஆசீர்வாதமாக இருக்க முடியாது. ஆகவே நாம் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ள ஆண்டவருடைய உதவிக்காக ஜெபிப்போம். ஆண்டவர் நிச்சயமாக நமக்கு உதவி செய்வார்.