பிப்ரவரி 3 நிலையற்றது எரேமியா 49:23-27
“சந்தோஷமான என் ஊராகிய அந்தப் புகழ்ச்சியுள்ள நகரம் தப்பவிடப்படாமற்போயிற்றே!” (எரேமியா 49:25).
இந்த இடத்தில் தமஸ்குவைப்பற்றி வேதனையான ஒரு காரியத்தைக் குறித்துப் பேசுவதைப் பார்க்கிறோம். சந்தோஷமான புகழ்ச்சி உள்ள நகரம் தப்பவில்லை. இந்த உலகத்தின் சந்தோஷம், உலகத்தினுடைய புகழ்ச்சி, உலகத்தினுடைய மேன்மையும் கொண்ட எந்த காரியமும் ஒருக்காலும் தேவனுக்கு முன்பாக தப்புவதில்லை. அவைகள் அழிந்து போய்விடும். இன்றைக்கு ஒருவேளை நமக்கு அது சந்தோஷத்தைக் கொடுப்பதாகக் காணப்படலாம். ஆனால் அது நிலையானது அல்ல. ஆண்டவருடைய காரியங்களுக்கு புறம்பான எதுவும் கர்த்தரிடத்தில் இருந்து தப்ப முடியாது.
“கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன், அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான். ஆனாலும் அவன் ஒழிந்துபோனான்; பாருங்கள், அவன் இல்லை; அவனைத் தேடினேன், அவன் காணப்படவில்லை” (சங்கீதம் 37:35-36). இந்த உலகத்தின் போலியான காரியங்களைச் சார்ந்து நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையை நாம் தள்ளிவிடக் கூடாது. ‘பச்சை மரத்தை போல தழைத்தவனாக இருந்தவன் ஒழிந்துபோனான், தேடியும் காணப்படவில்லை’ உலகத்தின் பேரில் நம்பிக்கை வைக்கும் மக்களுடைய நிலை அதுவாகவே இருக்கிறது.
உலகம் இன்றைக்குப் பச்சை மரத்தைப் போல் இருக்கும். ஆனால் திடீரென்று அது மறைந்து விடும். ஆனால் ஆண்டவருடைய காரியங்கள் அப்படியல்ல. அவைகள் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். “உன் நியாயாதிபதிகளை முன்னிருந்ததுபோலவும், உன் ஆலோசனைக்காரரை ஆதியில் இருந்தது போலவும் திரும்பக் கட்டளையிடுவேன்; பின்பு நீ நீதிபுரம் என்றும், சத்திய நகரம் என்றும் பெயர்பெறுவாய்” (ஏசாயா 1:26). ஆண்டவர் நம்முடைய வாழ்க்கையில் நன்மைகளை நிலைத்திருக்கப் பண்ணவார். ஆனால் உலகத்தின் காரியங்கள் அழிந்து போகிறதும், நிலையற்றதாகவுமே இருக்கும்.