கிருபை சத்திய தின தியானம்

நவபம்பர் 3          அநீதியான வழி          1 இராஜா 16:8-19

“சிம்ரி உள்ளே புகுந்து, யூதாவின் ராஜாவாகிய ஆசாவின்  

இருபத்தேழாம் வருஷத்தில் அவனை வெட்டிக் கொன்று போட்டு,

 அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்” (1 இராஜா 16:10)

 

    சிம்ரி என்பவன் யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் ஊழியகாரன். அவன் ஆசா ராஜாவின் இரதங்களில் பாதி பங்குக்குத் தலைவனாயிருந்தான். அவன் ஆசையைப் பாருங்கள்! சிம்ரி, தான் ராஜாவாக விரும்பினான். அதை நிறைவேற்றத் திட்டமிட்டு அவ்விதமாகவே அவன் நிறைவேற்றினான். அவன் என்ன செய்தான்? ஒரு சமயம் ராஜா ‘திர்சாவிலே அரமனனை ஊழியக்காரனாகிய அர்சாவின் வீட்டிலே குடித்து வெறிக்கொண்டிருக்கையில் ராஜாவை வெட்டிக் கொன்றுபோட்டான்.’ அவன் ஸ்தானத்தில் சிம்ரி விரும்பியபடியே ராஜாவானான்.

     இன்றைக்கு அநேகர் கேட்கும் கேள்வி என்ன? அநீதி செய்கிற அநேகர் நன்றாய் இருக்கிறார்களே! நீங்கள் முடிவைக்குறித்து சிந்திக்க வேண்டும். அவ்விதமான மக்கள் தேவனுடைய தண்டனைக்கு ஒருபோதும் தப்பமுடியாது. பாவத்தின் தண்டனைகளை அவர்கள் இந்த உலகிலேயே பெறுவார்கள். அப்படி பெறவில்லையென்றாலும் நித்திய தண்டனைக்கு அவர்கள் தப்பித்துக்கொள்ளமுடியாது. ஒருக்காலும் தேவன் அவர்களைக் கண்டும் காணாதவர் போல் அல்ல. அநேகர் அப்படி பேசுகிறார்கள், நினைக்கிறார்கள். அது தவறு.

     இந்த சிம்ரியின் முடிவைப் பாருங்கள். அவன் திர்ஷாவில் இருந்தபொழுது அதை முற்றிகைப்போட்டார்கள். ‘பட்டணம் பிடிப்பட்டதை சிம்ரி கண்டபொழுது அவன் ராஜாவின் வீடாகிய அரனைக்குள் பிரவேசித்து தான் இருக்கிற ராஜ அரன்மனையை (தானே) கொளுத்தி அதிலே செத்தான்.’ (1இராஜா 16:17,18) எதை ஆசையாய், அநியாயமாய் பெற்றானோ அதுவே அவனுக்கு கண்ணியாயிற்று. அநியாயமாய் பெற்ற ராஜ பட்டமும், அரண்மனையுமே அவன் மரணத்திற்கு வழிவகுத்திற்று. அன்பானவர்களே! அநீதியான பொருளுக்காக, அநீதியான வழியில் பெறுபவர்களுக்காக ஆசைப்படாதீர்கள். அது ஒருபோதும் ஆசீர்வாதமாக இருக்காது. உள்ளத்தில் திருப்தியாயிருப்பதே நல்லது. தேவன் அதை ஆசீர்வதிப்பார்.