ஜூலை 14
“கல்லறையின் வாசலிலிருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டித் தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொன்டார்கள்” (மாற்கு 16:3).
மகதலேனா மரியாளும் மற்ற ஸ்திரிகளும் சுகந்தவர்கங்களை கொண்டு வருகிறார்கள். அவர்கள் மரித்துப்போன இயேசுவின் சடலத்தையே பார்ப்போம் என்று சென்றார்கள். இன்றைக்கு அநேகரின் பக்தி அப்படியாகவே இருக்கிறது. அவர்கள் இருதயத்தில் இயேசுவைக்குறித்து வாஞ்சை ஒரு பக்கம் இருக்கிறது. ஆனால் அது ஜீவனுள்ள கிறிஸ்துவைக் காணும்படியான விசுவாசமாக இல்லை. பாரம்பரியம் என்ற சுகந்த வர்க்கம் அவர்களிடத்தில் இருக்கிறது. கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்த பாரம்பரியம் இருக்கலாம். ஞாயிறு தோறும் ஆலயம் செல்லும் பழக்கம் இருக்கலாம். இவைகளின் மத்தியில் நீ இயேசுவின் மீது ஒருவிதமான பிரியம் வைத்திருக்கலாம். ஆனாலும் அவைகள் யாவும் வெறும் சுகந்தவர்க்கங்கள்தான். ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு அவைகள் தேவையில்லை. அவைகளினால் நீ உயிருள்ள கிறிஸ்துவை பிரியபடுத்தமுடியாது. அவைகள் உன்னை தேவனோடு ஜீவனுள்ள தொடர்புக்கு உட்படுத்தாது.
இவர்களுடைய மற்றொரு பெரிய பிரச்சனை கல்லரையின் வாசலிலிருந்த கல். அது அவிசுவாசத்தைக் குறிக்கிறது. அவிசுவாசம் பெரிய கல் போன்ற தடையாயிருக்கிறது. தேவன் இவர்கள் வாஞ்சையைப் பார்த்து, பெரிய கல்லை அவர்களால் நீக்கிப்போட முடியாதிருந்த அந்த வேளையில் கர்த்தரே அதைச் செய்தார். மெய்யான உயிர்தெழுதலின் செய்தியை அவர்கள் கேட்பதற்கு அந்த அவிசுவாசகல் புரட்டப்பட வேண்டியதாயிருந்தது. அவர்கள் அப்படியே கல்லரையின் உள்ளே சென்றபொழுது “பயப்படாதிருங்கள்”, சிலுவையில் நசரேனாகிய அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள், அவர் உயிர்தெழுந்தார். அவர் இங்கே இல்லை, இதோ அவரை வைத்த இடம்” (மாற்கு16:6). என்பதைக் கேட்டார்கள். நீ தேவனிடத்தில் வருவாயானால் பெரியகல் போன்ற உன் அவிசுவாசத்தை நீக்கி, மெய் கிறிஸ்துவின் உயிர்தெழுதலில் உன்னைப் பங்குபெறச்செய்வார். உயிர்தெழுதலின் வல்லமை நீ கிறிஸ்துவுக்கென்று வாழ உன்னைப் பெலப்படுத்தும்.