நவம்பர் 11
“நாங்கள் உங்களிடத்தில் வைத்திருக்கிற அன்புக்கொப்பாய், நீங்களும் ஒருவரிடத்தில் ஒருவர் வைக்கும் அன்பிலும் மற்றெல்லா மனுஷரிடத்தில் வைக்கும் அன்பிலும் கர்த்தர் உங்களைப் பெருகவும் நிலைத்தோங்கவும் செய்து” (1 தெச 3:12).
பவுல் இங்கு தன்னுடைய முன் மாதிரியைக் குறிப்பிட்டு, நாமும் அவ்விதமாய் வாழவேண்டும் என்று வலியுறுத்துகிறார். “நாங்கள் உங்களிடத்தில் வைத்திருக்கிற அன்புக்கொப்பாய்” என்று சொல்லுகிறார். வேதத்தில் நமக்கு ஒரு அழகான முன்மாதிரியை வைத்திருப்பதற்கு, நாம் தேவனுக்கு நன்றி சொல்லுவோம். அதுமாத்திரமல்ல நாம் தேவனுடைய பிள்ளைகளை நேசிக்கவும், அன்பு செலுத்தவும் கடனாளிகளாக இருக்கிறோம். தேவனுடைய பிள்ளைகளை நேசிப்பது தேவனுக்குப் பிரியமானதாக இருக்கிறது. ஆகவேதான் பவுல்: “மற்றெல்லா மனுஷரிடத்தில் வைக்கும் அன்பிலும் கர்த்தர் உங்களைப் பெருகவும் நிலைத்தோங்கவும் செய்து” என்று சொல்லுகிறார். நாம் பிறரையும் நேசிக்கூடிய குணாதிசயத்தைக் கொண்டிருக்கிறோமா?
நம் வாழ்க்கையில், கிறிஸ்துவானவர் தகுதியில்லாத நம்மை அதிகமாய் நேசிக்கிறார். அவ்விதமான அன்பை நாம் பிறரிடத்திலும் செலுத்தும் படியாக, நாம் கடனாளிகள். தேவன் நம்மீது அன்பு செலுத்த, நம்மில் என்ன நன்மையைக் கண்டார் என்று நினைக்கிறீர்கள்? நாம் பாவிகளாய் இருக்கையில் கிறிஸ்து நம்மை நேசித்தார். ஆகவே நாமும் மற்றவர்களை அந்த நிபந்தனையற்ற அன்பினால் நேசிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். அவர்களுக்காக ஜெபிக்கவும், அவர்களுக்காக உதவி செய்யவும், அவர்களை கிறிஸ்துவுக்குள் ஆதாயப்படுத்தவும் நாம் பொறுப்பாளிகள் என்பதை மறக்கக்கூடாது. அன்பு திரளான பாவங்களை மூடும் என்பதை நினைவில் கொள்(1 பேதுரு 4:8). நாம் அந்த அன்பில் நாளுக்கு நாள் பெருகவும், நிலைத்தோங்கவும் கர்த்தரிடத்தில் ஜெபிப்போமாக.