கிருபை சத்திய தின தியானம்
நவம்பர் 1 அவிசுவாசம் மாற்கு 9 : 17-27
“ஆண்டவரே என் அவிசுவாசம் நீங்கும்படி உதவி செய்யும்” (மாற்கு 9 : 24 )
இங்கு உண்மையிலேயே வாழ்க்கையில் அதிகம் நொந்துப்போன ஒரு தகப்பனைப் பார்க்கிறோம். அவனுடைய மகனின் வேதனையைக் கண்டு உள்ளம் உடைந்துப்போன நிலையில் பேசுகிறான். ‘அவன் போதகரே, ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன். அது அவனை எங்கே பிடித்தாலும் அங்கே அவனை அலைகழிக்கிறது, அப்பொழுது அவன் நுரைதள்ளி, பல்லைக் கடித்து, சோர்ந்து போகிறான். அதை துரத்திவிடும்படி உம்முடைய சீஷரிடத்தில் கேட்டேன், அவர்களால் கூடாமற்போயிற்று.’ இப்பொழுது அவனுக்கு இருந்த கொஞ்சம் நம்பிக்கையும் போயிற்று.
அன்பான நண்பரே! ஒருவேளை உன்னுடைய வாழ்க்கையிலும் நீ இவ்விதம் சோர்ந்து போயிருக்கலாம். பொய் நம்பிக்கைகளை சொல்லி ஏமாற்றுகிற பொய் ஊழியர்கள் பிடியில் அகப்பட்டு சோர்ந்து போயிருக்கலாம். ஆம்! இன்றைக்கு எத்தனையோ பொய் ஊழியர்கள் பலவிதமான பொய்களைச் சொல்லி மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். தேவன் அப்படி செய்வார் இப்படி செய்வார் என்று பெரிய எதிர்பார்ப்புக்குள்ளாக நம்ப வைக்கிறார்கள். அவ்விதம் நடக்காத பொழுது ஏன் என்று அந்த ஊழியர்களைக் கேட்டால், உங்களுக்கு விசுவாசம் இல்லை, அதனால்தான் நீங்கள் இந்த அற்புதத்தை பெற்றுக் கொள்ளவில்லை என்று சொல்லுகிறார்கள். இது உண்மையிலேயே ஏமாற்று வித்தை.
ஆனால் இந்த தகப்பனின் மாதிரி உனக்கு நிச்சயமாக நம்பிக்கையைக் கொடுக்கும். ஆண்டவர் இந்த மனிதனைப் பார்த்து நீ விசுவாசிக்கக் கூடுமானால் ஆகும். என்றார். ஆனால் இந்த தகப்பனோ ஏற்கனவே இருந்த கொஞ்சம் நம்பிக்கையையும் இழந்து போயிருந்தான். அன்பானவரே! இப்பொழுது அவன் செய்தது என்ன? ‘விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவி செய்யும் என்று கண்ணிரோடே சத்தமிட்டு சொன்னான்.’ ஆம்! உண்மையை, தாழ்மையாய் இயேசுவினிடத்தில் அறிக்கை செய்தபோது ஆண்டவர் அந்த மகனை விடுதலையாக்கினார். நீயும் இவ்விதம் உன் அவிசுவாசத்தை உண்மையாய் அறிக்கையிடு. விடுதலை பெறுவாய்.