கிருபை சத்திய தின தியானம்

மே 4      இரக்கங்களுக்கு  முடிவில்லை      புலம்பல் 3 : 12 – 24

நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை’ (புலம்பல் 3: 22).

            நாம் உண்மையிலேயே கர்த்தரிடைய வார்த்தையின் வெளிச்சத்தில் நம்மை ஆராய்ந்து பார்ப்போமானால் நிச்சயமாக நாமும் இவ்விதமாகவே சொல்லக்கூடும். கர்த்தருடைய அதிகமான இரக்கங்களினிமித்தம், அவருடைய கிருபைகளினிமித்தம் நம்மை தேவன் அழித்துப்போடவில்லை. ஆனாலும் தேவன் ஏன் நம் மேல் பொறுமையுள்ளவராய் இருக்கிறார்? அவருடைய கிருபைகள், இரக்கங்கள் நிமித்தமே. அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும் நம்முடைய அக்கிரமங்களுக்குத்தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்’. (சங் 103 : 10). தேவனுடைய இரக்கம் பெரியது. மேலும் அவருடைய இரக்கங்களுக்கு எல்லையில்லை. அது விஸ்தாரமானது. அதற்கு ஒருக்காலும் முடிவு வராது.

            அன்பானவர்களே! தேவனுடைய இரக்கத்தைக்குறித்து அதிகம் சிந்தியுங்கள். ‘அவைகள் காலைதோறும் புதியவைகள். ஒவ்வொரு நாளும் தேவன் புதிய கிருபைகளை, இரக்கங்களை  உனக்கென்று வைத்திருக்கிறார். அவருடைய இரக்கத்தைச் சார்ந்துகொள்.’ கர்த்தாவே இந்த நாளில் எனக்குத் தேவையான புதிய இரக்கங்களை வைத்திருப்பதற்காக ஸ்தோத்திரம். அவைகளை நான் என்னில் அதிகம் உணரச்செய்யும்.’ என்று ஜெபி. நாம் அனைவரும் வித்தியாசமான மக்கள், நம்முடைய தேவைகள் வித்தியாசமானவைகள். ஆனாலும் ‘ஆண்டவரே உம்முடைய இரக்கத்தின்படி என்னை வழிநடத்தி என் தேவைகளைச் சந்தியும், நான் உம்முடைய இரக்கத்திற்கு பாத்திரவானாகவும், சாட்சியாகவும் ஜீவிக்க உதவி செய்யும் என்று உண்மையாய் ஜெபிப்பாயானால் தேவன் உனக்குச் செவிக்கொடுத்து உதவி செய்வார். தானியேலைப்போல நாமும் ‘நாங்கள் எங்கள் நீதியையல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி, எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாகச் செலுத்துகிறோம்’ என்று ஜெபிப்போமாக. இவ்விதமான ஜெபத்தை கர்த்தர் ஒருக்காலும் அலட்சியப்படுத்தமாட்டார்.