கிருபை சத்திய தின தியானம்

டிசம்பர் 7                   இரண்டுவிதமான பாதை                நீதி 4:18–27

      “நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப்

பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போலிருக்கும்.

துன்மார்க்கருடைய பாதையோ காரிருளைப்போலிருக்கும்;

தாங்கள் இடறுவது இன்னதில் என்று அறியார்கள்”(நீதி 4:18–19).

      நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை இந்த வசனம் நமக்கு காட்டுகிறது. இங்கு அவர்களின் பாதையில் உள்ள வேறுபாட்டை பாருங்கள். நீங்கள் கர்த்தருடைய நீதியை சார்ந்து வாழுகிற மக்களாக இருப்பீர்கள் என்றால், பாதையானது அதிகப் பிரகாசமுள்ளதாக இருக்கும். அதில் இடறல் என்பது கிடையாது. உங்களுடைய பாதையானது செவ்வையானதாக இருக்கும்.  நீதியின் பாதையில் தேவன் நம்மோடு கூட இருந்து நம்மை வழிநடத்துவார். நாம் எதற்கும் அஞ்சவேண்டிய அவசியமில்லை. தைரியமாக அதில் நடக்கமுடியும். உங்களுடைய எல்லா சூழ்நிலையிலும் கர்த்தர் உங்களோடு இருந்து, உங்களை முற்றும் முடிய இரட்சிப்பார்.

      இன்னொரு பாதை இருக்கிறது, அது துன்மார்கனின் பாதை. அது காரிருள் கொண்ட அதிபயங்கரமான பாதை. காரிருள் என்பது அதிபயங்கரமான இருளாகும். அதில் எப்பொழுதும் இடறல் இருக்கும். அதனுடைய வழிகாட்டி பிசாசு. வேதம் சொல்லுகிறது, அந்த பாதையில் இடறும் பொழுது எதில் இடறினோம் என்று அறிய முடியாது. துன்மார்க்கனின் முடிவு நித்திய ஆக்கினை.

      நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கும்பொழுது ஜீவப்பாதையில் வழிநடத்தப்படுவோம். துன்மார்க்கனோ அவன் செல்லும் பாதையை அறியான். தேவனுடைய பிள்ளைகளின் நடைகளைக் கர்த்தர் காத்துக் கொள்ளுகிறார். துன்மார்கனின் நடைகளை பிசாசு தாறுமாறாக மாற்றுகிறான்.  அன்பான சகோதரனே! சகோதரியே! உன்னுடைய பாதை எது? நீ தேவனுடைய கட்டளையின்படி வாழுகிறாயா? நீ இரட்சிக்கப்பட்டிருக்கிறாயா? தவறான பாதையில் இருப்பாயானால், பாவங்களை அறிக்கை செய்து நீதியின் பாதை பக்கமாக திரும்பு (மனந்திரும்பு).