பிப்ரவரி 11        இரண்டு நிலை           கொலோ 1:15-23

“முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயும் இருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்ச சரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்” (கொலோ 1:21).

      இரண்டு வித்தியாசமான காரியங்களை இங்கு நாம் பார்க்கிறோம். ஒன்று பழைய வாழ்க்கையினுடைய மனித நிலைபாடு. இன்னொன்று புதிய வாழ்க்கையினுடைய நிலைப்பாடு. இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத ஒரு நிலையாக காணப்படுகிறது. முன்னே நாம் தேவனுக்கு முற்றிலும் அறியப்படாத அல்லது அவருடைய கிருபைக்கு அறியப்படாதவர்கள். நம்முடைய செயல்களில் நாம் செய்வது அனைத்துமே துர்க்கிரியையாக இருந்தது. அது சுயநீதியினால் உண்டான சுய பெருமையாகும். அது மாத்திரமல்ல தேவனுடைய காரியங்களை நாம் முற்றிலும் எதிர்க்கிறவர்களாக, அவருடைய அருமையான அன்பையும், உறவையும் புறக்கணிக்கும் துரோகிகளாக இருந்தோம்.

      ஆனால் அப்படியான சூழ்நிலையில் ஆண்டவர் நம்முடைய வாழ்க்கையில் உன்னதமான ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினார். தூய்மையான ஒரு பரிசுத்த வாழ்க்கை வாழவும், நம் பேரில் இருக்கும் குற்றங்களை நீக்கி மீட்டுக்கொண்டவராகவும், எந்த ஒரு காரியத்திலும் நமக்கு எதிரிடையாய் எந்த காரியமும் இல்லாதபடிக்கு நம்மை நிலைநிறுத்துகிறார். இவ்வாறாக நம்மை மாற்றியிருக்கிறார். இது எப்படி ஆகும்? இது ஆண்டவருடைய கிருபை. அவரோடு ஒப்புரவாகும்படியாக தம்முடைய பிள்ளைளை மீட்கிறார். “நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே” (ரோமர் 5:9) என்று பவுல் சொல்லுகிறார்.

      இது எவ்வளவு மகத்துவமான கிருபை என்பதை எண்ணிப் பார்ப்போம். ஆண்டவருடைய அன்பை எண்ணிப் பார்க்கும்பொழுது நம்மால் ஒருக்காலும் விளங்கிக்கொள்ள இயலாது. “நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே” (ரோமர் 5:10). இந்த அன்பையும் இந்த கிருபையையும் மனிதன் விளங்கிக் கொள்வது என்பது  சாதாரணமான காரியமல்ல. தேவ ஆவியானவர் நம்முடைய மனதில் புதுப்பித்தலையும், நம் மனதில் புதிய ஜீவனையும் கொடுத்தாலன்றி விளங்கிக் கொள்வது என்பது கூடாத காரியம்.