கிருபை சத்திய தின தியானம்

ஆகஸ்ட் 20                திருக்கான மனம்          யாக்கோபு 1:1-20

“இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்” (யாக் 1:8)

      அநேகருடைய வாழ்க்கையில் இருமனம் உண்டு. அவர்கள் தங்கள் வாழ்க்கையில் எதிலும் நிலைத்திருக்க முடிவதில்லை. நாம் எப்பொழுதும் இருமனமுள்ளவர்களாக இருப்போமானால், தேவனுடைய உன்னதமான சிலாக்கியங்களை எவ்விதம் பெறமுடியும்? உறுதியாக ஒரே மனநிலையுடன் கர்த்தரிடத்தில் சேரவேண்டும். மேலும் யாக்கோபு, “தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்” (யாக் 4:8) என்று சொல்லுகிறார். ஒருவேளை உன் ஆவிக்குரிய வாழ்க்கையில் பாவம் இருக்கும் பொழுது இருமனமிருக்குமோ? இருமனமுள்ளவர்களே உங்கள் இருதயத்தை பரிசுத்தப்படுத்துங்கள். ஏன் நம் வாழ்க்கையில் இருமனம்? ஏன் நம் வாழ்க்கையில் விசுவாசமில்லை? கர்த்தரிடத்தில் நம்மை தாழ்த்துவோம். அவரிடத்தில் நம் அவிசுவாசத்தை அறிக்கையிடுவோம். அப்பொழுது கர்த்தர் நம் இருமனமுள்ள இருதயத்தை எடுத்துப்போடுவார்.

       ஏசாயா தீர்க்கத்தரிசி “இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது” (ஏசாயா 29:13) என்று சொல்லுகிறார். அருமையான சகோதரனே சகோதரியே, நம் வாழ்க்கையில் நாவினால் கர்த்தரை சேர்ந்து, நம் உதட்டினால் அவரை கனம் பண்ணி, இருதயத்தினால் அவருக்கு தூரமாகவும், அவருக்கு பயப்படாமலும் இருப்போமானால் நம்முடைய விசுவாச வாழ்க்கை ஒரு கேள்விக் குறியே. ஆகவே நாம் ஒருபோதும் அவ்விதமாக காணப்படக் கூடாது. நம்முடைய வாழ்க்கையில் உறுதியான நிலைத்திருத்தல் தேவை. ஆவிக்குரிய சிந்தனை எப்பொழுதும் நமக்கு அவசியம்.

        எனவேதான் இயேசுவானவர் “இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது” (மத் 6:24) என்று சொல்லுகிறார். நம் வாழ்க்கையில் உலகத்தையும் நேசித்து தேவனையும் நேசிப்பேன் என்று சொல்லுவது வேதத்திற்கு முரணான காரியம். உன்னுடைய இருதயத்தை ஆராய்ந்து பார்த்து, உன் அவிசுவாசத்தையும், உலக ஆசையையும் தேவனிடத்தில் அறிக்கையிட்டு மனந்திரும்பு. கர்த்தர் உன்னை நிலைவரப்படுத்துவார்.