கிருபை சத்திய தின தியானம்

நவம்பர் 13             டி. வி சீரியல்           பிரசங்கி 2:1-10

“என் கண்கள் இச்சித்தவைகளில் ஒன்றையும்

நான் அவைகளுக்குத் தடைபண்ணவில்லை”(பிரசங்கி 2 : 10)

 

     சாலொமோன் தனக்கு இந்த உலகம் கொடுக்கும் அனைத்து இன்பங்களையும் அனுபவித்து கடைசியில் கொடுத்த முடிவு ‘எல்லாம் மாயை’ என்பதே. இன்றைக்கு அநேகர் இந்த மாயையை நம்பி தங்களுடைய வாழ்க்கையை கெடுத்துக்கொள்கிறார்கள். டி.வியில் பல தவறான காரியங்களைப் பார்ப்பது கண்களின் இச்சையே. மணிக்கணக்காக டி.வியில் நேரத்தை செலவிடுகிறார்கள். இதற்கு அவர்கள் சொல்லும் சாக்குப் போக்கு என்ன? கொஞ்சநேரம் எல்லாவற்றையும் மறந்து இதைப்பார்க்கிறோம். இதன் மதிப்பு என்ன என்பதை நீங்கள் நன்கு அறியவேண்டும். மற்றவர்களைப்போல் சினிமா கொட்டகைக்குச் சென்று சினிமா பார்க்கவில்லை வீட்டில் கொஞ்ச நேரம் பொழுதுப்போக்கு அவ்வளவுதான். சரி டி.வியில் அப்படி என்ன முக்கியமாக பார்க்கிறீர்கள் என்றால், ‘ஒரு சில சீரியல்கள் மட்டுமே பார்க்கிறோம். நாங்கள் சினிமா பார்ப்பதில்லை, சீரியல்தான் பார்க்கிறோம்’ சீரியலும் சினிமாவும் ஒன்றுதான். அப்படி சீரியல் என்று ஆரம்பித்த அநேக கிறிஸ்தவர்கள் ஏற்கனவே சினிமாவும் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். உனக்கும், சினிமாவையும் சேர்த்துப் பார்க்க அதிக காலம் பிடிக்காது.

    சரி சீரியல் சினிமா பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது? முதலாவது உன் ஒழுக்கத்தைப் பாதிக்கும், உன்பிள்ளைகளின் ஒழுக்கத்தையும் பாதிக்கும். இவைகள் உன் மனதில், இருதயத்தில் , ஒழுக்க சீர்கேடு என்ற வித்தை விதைக்கின்றன. அவைகள் முளைத்து செய்கைகளாக வெளிப்படும். தீமையை கர்பந்தரித்து அக்கிரமத்தைப் பெறுகிறார்கள்‘ (ஏசாயா 59:4) அவ்விதம் அவைகளை பார்க்கும்போது எல்லா காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள்‘ (நீதி 4:23) என்ற கட்டளையை அலட்சியப்படுத்துகிறாய். உமக்கு விரோதமாக பாவம் செய்யாதப்படிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்துவைத்தேன்‘ (சங் 119:11) என்று தாவீது போல் சொல்லாமல் என் இருதயத்தைப் பாவ எண்ணங்களால் பாவம் செய்யும்படி நிரப்புகிறேன் என்றுதான் உன்னால் சொல்லமுடியும். உன் இருதயத்தில் பரிசுத்த ஆவி எப்படி வாசஞ் செய்யமுடியும்? சிந்தித்துப்பார்.