“மனுஷன்மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரேமியா 17:5).

பொதுவாக இன்றைக்கு தன்னையும் தன் பெலத்தையும் நம்பி வாழ்ந்து தன்னுடைய வாழ்க்கையைக் கட்ட முடியும் என்ற பொய்யான நம்பிக்கை மனிதனில் காணப்படுகிறது. ஆனால் ஒரு மனிதன் இவ்விதமாக வாழும்பொழுது, அவன் கர்த்தரை விட்டு விலகுகிற மிகப்பெரிய ஆபத்தைக் கொண்டிருக்கிறான். அவனுடைய இருதயம் தேவனை நோக்கிப் பார்ப்பதில்லை. சுய நம்பிக்கையும் சுய வழியும் தேவனை விட்டு அவனை தூரப்படுத்துகிறது. இது மிக ஆபத்தான ஒன்று. அவன் சபிக்கப்பட்டவன் என்று வேதம் சொல்லுகிறது. அவனுடைய நிலையைக் குறித்துச் சொல்லும்போது 6ஆம் வசனத்தில் “அவன் அந்தரவெளியில் கறளையாய்ப்போன செடியைப்போலிருந்து, நன்மைவருகிறதைக் காணாமல், வனாந்தரத்தின் வறட்சியான இடங்களிலும், குடியில்லாத உவர்நிலத்திலும் தங்குவான்.” அவனுடைய வாழ்க்கை ஒரு நம்பிக்கையற்றதாகக் காணப்படுகிறது. ஒருநாளும் நம்முடைய சொந்த பெலனும் ஞானமும் நமக்கு உதவி செய்யாது என்பதைத் தெளிவாய் அறிந்துகொள்வது நமக்கு நல்லது. அநேக வேளைகளில் நாம் நம்மைச் சார்ந்து தேவனை விட்டு விலகுகிறோம். தேவன் அவ்விதமான ஆபத்துக்களில் இருந்து நம்மைக் காத்துக்கொள்வாராக. அவ்விதமாய் விலகுகிற ஒரு பொல்லாத இருதயம் நம்முடைய ஆத்துமாவை அழிவுக்குக் கொண்டுசெல்லும். ஆண்டவரே இவ்விதமான ஒரு நிலையிலிருந்து என்னைக் காத்துக்கொள்ளும் என்று  கர்த்தரை நோக்கி நாம் ஜெபித்து அவருக்குப் பயந்து வாழுவோம்.