அக்டோபர் 11

நீர் சர்வவல்லவரிடத்தில் மனந்திரும்பினால், திரும்பக் கட்டப்படுவீர் (யோபு22:23)

இங்கு மிகவும் உன்னதமான ஒரு சத்தியம் கூறப்படுகிறது. “நீ மனந்திரும்பினால்”. இது ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுக்கப்படும் தேவ அழைப்பு. இந்த அழைப்பை, தேவன் மனிதனுக்கு ஆதியிலிருந்து கொடுத்து வருகிறார். இந்த அழைப்பின் செய்தி தம்முடைய தீர்க்கத்தரிசிகள் மூலமாகவும், ஊழியர்கள் மூலமாகவும் தொன்று தொட்டு தேவனால் மனுக்குலத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதற்காக எத்தனையோபேர் காடுகளையும், மலைகளையும் கடந்து சென்றுள்ளார்கள் என்று பார்க்கும்போது மிகவும் ஆச்சரியமாயிருக்கிறது!

மனிதன் இந்த உலகத்தில் தன்னைக் குறித்து உண்மையாக உணர்வதே, அவனை மனந்திரும்புதலுக்கு வழி நடத்தும். ஏனென்றால் இந்த உணர்வு இல்லையென்றால் அவன் மனந்திரும்புவது என்பது கூடாத காரியம். அவன் இழந்துபோன ஒரு பாவி என்று உணரும்வரை, அவன் இருளிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறான். இருண்ட பாதையிலேயே அவன் வாழ்க்கை சென்றுகொண்டிருக்கிறது. வஞ்சிக்கப்பட்ட மனது அவனை வழிநடத்துகிறது. ஆனால் தேவன் அவனை அழைக்கிறார். அவன் யாரை நோக்கி மனந்திரும்ப வேண்டும்? சர்வவல்லவரை நோக்கி, சர்வவல்லவரிடத்தில் மனந்திரும்பவேண்டும். அவருடைய வழிக்குள்ளாக மனந்திரும்பவேண்டும். தேவன் நம்மை அவ்விதம் அழைக்க வேண்டிய அவசியமில்லை. நம்மைக் குறித்து அவ்விதம் அக்கரைகொள்ள வேண்டிய எந்த அவசியமுமில்லை, ஆனால் தேவனோ, இரக்கத்தில் மிகுந்தவராய் அவ்விதம் அழைக்கிறார்.

அப்படி மனந்திரும்பும் போது, அவர்களுக்கு என்ன நடக்கும் என்று சொல்லப்படுகிறது? “திரும்பக்கட்டப்படுவீர்.” அன்பான சகோதரனே! சகோதரியே! உன் வாழ்க்கை இடிந்துபோன கட்டிடத்தைப் போல இருக்கலாம். இடிந்துபோன கட்டிடத்தால் என்ன பிரயோஜனம்? அப்படி நீ உனக்கும் மற்றவர்களுக்கும் பிரயோஜனமற்ற ஒரு நபராக இருக்கலாம். ஆனால் உனக்கும் நம்பிக்கை உண்டு என்பதை மறவாதே. சர்வவல்லவர் உன்னில் உன்னதமான காரியத்தைச் செய்யவல்லவர். உன்னை மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக உபயோகப்படுத்துவார். மனந்திரும்பு!