கிருபை சத்திய தினதியானம்

ஏப்ரல் 10              தேவனின் உண்மைத்தன்மை          எசே 26:1–21

     ‘உன்னை வெறும் பாறையாக்கிவிடுவேன்;’ (எசேக்கியேல் 26:14).

     தேவன் எதைப் பார்த்து இவ்விதம் சொன்னார்? ஆம்! தீரு பட்டணத்தைப் பார்த்து இவ்விதமாக சொன்னார். நேபுகாத்நேச்சார் என்ற பாபிலோன் இராஜா இந்த பட்டணத்தை அழித்த பின்பாக அந்தப் பட்டணம் ஒன்றிற்கும் உதவாத இடமாக மாறிப்போயிற்று. இந்நாட்களிலும் அந்த இடமானது மீன்களை காய வைப்பதற்கும், மீன் வலைகளை காய வைப்பதற்குமே பயன்படுத்தப்படுகின்றது. கர்த்தர் சொல்லுவாரானால் அதை நிறைவேற்றுகிறவாகவே இருக்கிறார். கர்த்தர் சொல்லுவதைக் குறித்து நாம் அதிகம் பயப்படவேண்டும். தேவன் ஒரு எச்சரிப்பைக் கொடுப்பாரானால் அது நன்மைக்கே. ‘பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?’ (எண் 23:19) என்று வேதம் சொல்லுகிறது. 

  ஒருவேளை இவ்விதமான வசனங்கள் நம்மை பயமுறுத்துவதாகக் காணப்படலாம். ஆனால் கர்த்தரின் எச்சரிப்பு நீதியாகவே காணப்படும். தேவன் உண்மையுள்ளவர். தம் வார்த்தையில் மாறாத கர்த்தர். அவரின் எச்சரிப்பை நாம் அசட்டைப் பண்ணுவோமானால் அதன் விளைவு அதிபயங்கரம் என்பதை நினைவில் கொள். ‘அவர் இடித்தால் கட்டமுடியாது; அவர் மனுஷனை அடைத்தால் விடுவிக்கமுடியாது’ (யோபு 12:14) என்று யோபு சொல்லுகிறார். 

    நாம் தொழுது கொள்ளுகிற கர்த்தர் ஜீவனுள்ளவர். அவர் தேவாதி தேவன், மகத்துவமுள்ளவர். ஆகவே நம் வாழ்க்கையில் அவரை மாத்திரமே சார்ந்து கொள்ளுகிற இருதயம் நமக்குத் தேவை. அநேக சமயங்களில் நம் விருப்பத்தைக் கர்த்தர் நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கிறோம். இது ஜென்ம சுபாவத்தின் வெளிப்பாடு. நம்முடைய திட்டங்கள், விருப்பங்கள் என்பது மணலின் மேல் கட்டப்படுகின்ற வீட்டைப் போன்றதுதான். ஆனால் தேவன் வைத்திருக்கிற வழிகள் என்பது கன்மலையின் மேல் அஸ்திபாரம் போடப்பட்டதைப் போன்றது. தேவனுடைய வார்த்தை ஒருக்காலும் மாறாதது என்பதை மறந்துவிடாதே.