கிருபை சத்திய தின தியானம்

ஜூன் 9                  சத்தியம் விடுதலையாக்கும்         யோவான் 8:30– 40

சத்தியத்தையும் அறிவீர்கள்,

சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான் 8 : 32)

            ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் மெய்யான விடுதலையை தேவன் கொடுக்கிறார். விடுதலையில்லாத கிறிஸ்தவ வாழ்க்கையை வேதம் ஒரு போதும் சொல்லவில்லை,இயேசுவும் அவ்விதம் போதிக்கவில்லை. ஏனென்றால் அதற்கு பின்பு இயேசு தேவனை அறியாத வாழ்க்கையைக்குறித்து இவ்விதம் சொல்லுகிறார். ’பாவம் செய்கிற எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்’ (யோவான் 8 : 34). அன்பானவர்களே! இயேசு உங்களை இரட்சிப்பாரானால் நீங்கள் விடுதலையுள்ள ஒரு வாழ்க்கையைக் கொண்டிருப்பீர்கள். ஆவிக்குரிய போராட்டம் இருக்கும், சோதனை இருக்கும், ஆனால் நீ பழைய மனிதனைப் போல அவைகளுக்குஅடிமைபட்டு, அவைகளைச் செய்கிறவனாய் இருக்கமாட்டாய்.

            அப்பொழுது நாம் அறிவடைந்து கர்த்தரை அறியும்படி தொடர்ந்து போவோம்; அவருடைய புறப்படுதல் அருணோதயம் போல ஆயத்தமாயிருக்கிறது; அவர் மழையைப்போலவும், பூமியின் மேல் பெய்யும் மாரியைப்போலவும் நம்மிடத்தில் வருவார்’ (ஓசியா 6 : 30).  தேவனை அறிகிற அறிவு ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் தொடர்ந்து நடந்துக்கொண்டே இருக்கும்படியானதாக இருக்கும். அவனுடைய அறிவு ஆவிக்குரிய அறிவு, சத்தியத்தை அறிகிற அறிவு மேலும் மேலுமாக அவனில் அதிகமான விடுதலையைக் கொடுத்துக்கொண்டே இருக்கும். நீ மென்மேலும் சத்தியத்தில் பெலப்படுவாய்.

            குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்’  (யோவான் 8 : 36). ஆண்டவராகிய இயேசு நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்’ என்று சொன்னார். ’இயேசுவே சத்தியம்’ அவரின் விடுதலையே மெய்யான விடுதலை. அன்பானவர்களே! உங்கள் வாழ்க்கையில் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு இருக்கிறேன் என்று நீங்கள் சொல்லக்கூடுமா? சத்தியத்தைப் பற்றிக்கொள்ளுங்கள் தேவனுடைய வார்த்தையை, ஆண்டவராகிய இயேசுவைப் பற்றிக் கொள்ளுங்கள். விடுதலைபெறுவீர்கள்.