கிருபை சத்திய தின தியானம்

ஏப்ரல் 23                     வெளிச்சமும் சத்தியமும்                       சங் 43:1-5

“உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்;

அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த பர்வதத்திற்கும்

உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டுபோவதாக” (சங் 43:3).

     நாம் இந்த உலகத்தில் தேவனுடைய சத்தியத்தை நேசித்து அதின் வழியில் செல்லுவதே நமக்கு பாதுகாப்பானது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். கர்த்தர் நமக்கு வெளிச்சத்தை வைத்திருக்கிறார். இங்கு சங்கீதக்காரனுடைய வாஞ்சையைப் பாருங்கள். நம்முடைய வாஞ்சை அவ்விதம் இருக்கிறதா? தேவனுடய வெளிச்சமான  சத்தியம் நம்மை நடத்தும் படியாக ஒப்புக்கொடுக்க வேண்டும். ஏனென்றால் அவ்விதமாக நாம் செல்லும் பாதை தேவனுடைய பரிசுத்தப் பர்வத்திற்கும், அவருடைய வாசஸ்தலத்திற்கும் கொண்டுசெல்லும்.

      இந்த உலகத்தில் ஆண்டவருடைய சாத்தியமில்லாத, வெளிச்சமில்லாத எந்த ஒரு காரியமும், எவ்வளவு மேன்மையானதாகக் காணப்பட்டாலும் அது நம்மை அழிவின் பாதையில் கொண்டு செல்லும் என்பதை மறந்துவிடக் கூடாது. ஒருக்காலும் அது நமக்கு பாதுகாப்பானதாக இருக்காது. இன்னுமாக சங்கீதக்காரன், “நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது” (சங் 97:11) என்று சொல்லுகிறார். நமக்கு கர்த்தர் மகிழ்ச்சியையும், வெளிச்சத்தையும் வைத்திருக்கும்பொழுது உலகத்திற்குரிய காரியங்களில் நாட்டமாக காணாதபடிக்கு ஜாக்கிரதையாய் நம் இருதயத்தை காத்துக்கொள்ள வேண்டும்.

      இன்னுமாக சங்கீதம் 25:4-5 –ல் “கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்” என்று தாவீது இராஜா சொல்லுகிறதைப் பார்க்கிறோம். கர்த்தருடைய சத்தியத்தில் நடக்கும்படியான ஒரு வாழ்க்கையை நாம் வாஞ்சிப்பதும், தெரிந்து கொள்ளுவதும் நமக்கு பாதுகாப்பானது. அது நித்தியமான ஆவிக்குரிய வாழ்க்கைக்கு நம்மை வழி நடத்துகிறதுமாக காணப்படும்.. இன்னுமாக சங்கீதம் 40:11 வது வசனத்தில் “உமது கிருபையும் உமது உண்மையும் எப்பொழுதும் என்னைக் காக்கக்கடவது” என்று ஜெபிக்கிறார். நம்மைக் காப்பது கர்த்தருடைய கிருபையும், அவருடைய உண்மையும் என்பதை மறந்துவிடாதே. நாம் நிர்மூலமாகதிருப்பதும் அவருடைய கிருபையே.