ஆகஸ்ட் 13
“கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின” (யோவான் 1:17)
நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய் கொடுக்கப்பட்டது. நியாயப்பிரமாணம் பாவத்தைக்குறித்த அறிவை கொடுக்குமேயொழிய பாவத்திலிருந்து விடுதலையைக் கொடுக்கமுடியாது. ஆனால் நமதாண்டவர் இயேசுவின் மூலமாக கிருபையும் சத்தியமும் கொடுக்கப்பட்டது. கிருபையும் சத்தியமும் இணைந்ததுதான் சுவிசேஷம். இந்த இரண்டும் ஒரு கிறிஸ்தவனுக்கு இரண்டு கண்களைப்போல ஒளியைக் கொடுக்கிறதாயிருக்கிறது. இந்த இரண்டையும் தெளிவாய் அறிந்திருத்தல், மெய்யான ஒளியைக் கொடுக்கிறது. பவுல் கிருபையைக் குறித்தும் சத்தியத்தைக் குறித்தும் நிருபங்களில் அதிகம் சொல்லுகிறார்.
கிருபை என்று சொல்லப்படும்போது தகுதியற்ற ஒரு பாவிக்கு தேவன் இலவசமாய் கொடுக்கும் ஈவு. பவுல் கலாத்தியருக்கு எழுதின நிருபத்தில், “நீங்கள் கிறிஸ்துவின் கிருபையினால் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்” என்று எழுதுகிறார். நாம் தேவனைத் தேடாமல் நம் பாவ வழியில் போய்க்கொண்டிருந்தபோது, அவருடைய மட்டற்ற இரக்கம், தயவு, அதாவது கிருபையினால் நம்மை அழைத்தார். அவர் இவ்விதம் அழைக்காதிருப்பாரானால் நீயும் நானும் இன்னும் உளையான சேற்றில் உழன்று கொண்டிருப்போம். கண் சொருகிப்போன குருடர்களாய் அலைந்து கொண்டிருப்போம். ஒருவேளை இந்த நமது உலக வாழ்க்கை கூட எவ்வளவோ காலத்திற்கு முன்பாக முடிந்திருக்கலாம். ஒரு மெய் கிறிஸ்தவன் தன்னை அழைத்த தேவனின் கிருபையை ஒவ்வொரு நாளும் நினைவுகூர்ந்து, உள்ளத்தின் நிறைவால் கர்த்தருக்கு நன்றி செலுத்துவான்.
இன்று பிலாத்துவைப் போல அநேகர் “சத்தியமாவது என்ன? “என்று கேட்க்கிறார்கள். “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” (யோவான் 8:32) என்று ஆண்டவராகிய இயேசு தெளிவாய் சொல்லியிருக்கிறார். மேலும் “உம்முடைய வசனமே சத்தியம்” என்றும் சொல்லியிருக்கிறார். தேவனுடைய வார்த்தையை அறிகிற அறிவு உன்னை விடுதலைக்குள் வழிநடத்தும். தேவனுடைய வார்த்தையைப் பற்றிக்கொள்.