கிருபை சத்திய தின தியானம்

ஜனவரி 9            கர்த்தரை நம்பு                யாத் 14:1-14

      ‘அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்;

நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச்

செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள்

காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்’ (யாத் 14:13).

      அநேக ஆண்டுகளாக எகிப்தியரால் அடிமைப்பட்டு வாழ்ந்து கொண்டிருந்த இஸ்ரவேல் மக்கள், மோசேயினால் விடுவிக்கப்பட்டு வெளி வந்த வேளையில், எகிப்தியர் பின்வருகிறதை கண்ட இஸ்ரவேல் மக்கள் மிகவும் பயந்து நடுங்கினார்கள். அப்பொழுது மோசே இஸ்ரவேலரை நோக்கி இவ்விதமாய் சொன்னதைப் பார்க்கிறோம். அருமையானவர்களே! அநேக ஆண்டுகளாக நம்முடைய வாழ்க்கையில் தொடர்ந்து வரும் துன்பங்கள், பாடுகள் நீங்கும்படிக்கு தேவன் ஒரு எல்லையை வைத்திருக்கிறார். அவர் சொல்ல, எல்லா தீங்கும் விலகி ஓடிப்போம்.

மேலும் மோசே சொல்லுகிறார், ‘கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்’( யாத் 14:14). தேவன் நமக்காக யுத்தம் செய்யும் பொழுது, நமக்கு எதிராக இருக்கும் காரியங்கள் எவை? நமக்காக யுத்தம் செய்யும் கர்த்தரை நம்புவோம். இன்னுமாக எரேமியாவில் ‘குன்றுகளையும், திரளான மலைகளையும் நம்புகிறது விருதா என்பது மெய்; இஸ்ரவேலின் இரட்சிப்பு எங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் இருப்பது என்பது மெய்யே’(எரே 3:23) என்று வேதம் சொல்லுகிறது. அன்பானவர்களே! எதையுமே நம்பாதேயுங்கள் கர்த்தரை மாத்திரமே நம்புங்கள். மலையைப் போன்று உனக்கு நம்பிக்கையளிக்கும் மனிதர்களையோ அல்லது மற்ற சூழ்நிலைகளையோ நீ நம்பாதே. அது விருதா. கர்த்தரை மாத்திரமே நம்பு.

இன்னுமாக எரேமியாவின் புலம்பலில் ‘கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது’(புலம் 3:26) என்று வேதம் சொல்லுகிறது. அவருடைய காலத்துக்காக, செயலுக்காக நம்பிக்கையுடனே காத்திரு. அப்பொழுது கர்த்தர் நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கையில் தொடர்ந்துவரும் துன்பங்கள் யாவும் நீங்கும்படியான மகத்துவமான காரியத்தைச் செய்வார்.