“ஏழாந்தரம் ஆசாரியர் எக்காளங்களை ஊதுகையில், யோசுவா ஜனங்களை நோக்கி: ஆர்ப்பரியுங்கள், பட்டணத்தைக் கர்த்தர் உங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்” (யோசுவா 6:16).

எரிகோ பட்டணத்தை யோசுவாவும் அவனுடைய மக்களும் வெற்றிக்கொண்டதைப் பார்க்கும்பொழுது மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறது. இது முற்றிலும் பாதுகாக்கப்பட்ட ஒரு பட்டணம். இதை யுத்ததினால் அவர்கள் சுதந்தரிக்கவில்லை. விசுவாசத்தினால் சுதந்தரித்துக்கொண்டார்கள். இந்த உலகத்தில் நாம் நம்முடைய பெலத்தினாலும் ஞானத்தினாலும் பலக் காரியங்களைச் சுதந்தரிக்கப் பிராயசப்படுகிறோம். ஆனால் தோல்வி அடைகிறோம். ஆனால் தேவன் விசுவாசத்தினால் நாம் மிகப் பெரியக் காரியங்களையும் சுதந்தரித்துக் கொள்ளும்படியாக நமக்குக் கொடுக்கிறார். நம்முடைய வாழ்க்கையில் அநேக வேளைகளில் நாம் விசுவாசத்தினால் சுதந்தரித்துக்கொள்ளக் கூடிய காரியங்களைக் குறித்து அதிகமாய் நாம் சிந்திப்பதில்லை. தேவன் தம்முடைய ஞானத்தின்படி திட்டத்தின்படி நமக்குக் கொடுக்கும்படியான அருமையான சிலாக்கியங்கள் நமக்கு மிகுந்த ஆசீர்வாதமாக இருக்கும். என்ன ஒரு ஆச்சரியமானக் காரியம். சொல்லப்போனால் அவர்கள் யுத்தம் செய்து இந்த எரிகோ பட்டணத்தை ஜெயித்திருக்க முடியுமா என்று சிந்திக்கும்பொழுது, அதற்கு வாய்ப்பில்லை என்றே சொல்லலாம். ஏனென்றால் அது முற்றிலும் பாதுகாக்கப்பட்ட ஒரு பட்டணம். ஆனால் இதை விசுவாசத்தினால் அவர்கள் சுதந்தரித்துக் கொண்டார்கள். நம்முடைய வாழ்க்கையில் நம் பலவிதமான முயற்சிகளினால் பெற்றுக்கொள்ள முடியாததை விசுவாசத்தினால் நாம் பெற்றுக்கொள்ள முடியும். நம்முடைய விசுவாசம் மேலானதாக இருக்க வேண்டும். அநேக வேளைகளில் நம்முடைய விசுவாசம் மிக குறைவுள்ளதாக இருக்கிறது. “தேவனிடத்தில் இருந்து பெரியக் காரியங்களை எதிர்பார், தேவனுக்கென்று பெரியக் காரியங்களைச் செய்” என்று வில்லியம் கேரி சொல்கிறார். நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய மேலான காரியங்களைச் சுதந்தரித்துக் கொள்ளும்படியான விசுவாசத்தை தேவன் தாமே நமக்குக் கொடுத்து நம்மை ஆசீர்வதிப்பாராக. அது நிச்சயமாக மிகப்பெரிய வெற்றியாகவும் ஆண்டவருடைய நாமத்திற்கு மகிமையாகக் காணப்படும். நம்முடைய வாழ்க்கையில் விசுவாசத்தின் மூலமாக வெற்றிகளைப் பெற்றுக் கொள்ளுகிறவர்களாக காணப்படுவோமாக.