அக்டோபர் 8

“அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமானின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்” (மத்தேயு 15:27).

தேவனுடைய ஆசீர்வாதத்தைப்பெற நாம் உண்மையிலேயே அதிக வாஞ்சயோடும், கருத்தோடும் தேடுகிறவர்களாக இருக்கவேண்டும். இந்த கானானிய ஸ்திரீயைப் பாருங்கள். அவள் தேவை மிகப் பெரியது. அவளுடைய மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள். சாதாரணமான வேதனையல்ல. ஆனால் அவள் இந்த சூழ்நிலையில் மெய்யான விடுதலை கொடுப்பவரிடத்தில் போகிறாள். அவள் ஒரு புறஜாதியான ஸ்திரீ. ஆனாலும் கூட நம்பிக்கையோடே போகிறாள். நம்முடைய வாழ்க்கையில் நம்முடைய பிரச்சனை, தேவை எவ்வளவு பெரியதாக இருந்தாலும் தேவனிடத்தில் போகவேண்டும். மனிதனிடத்தில் அல்ல. இது மிக அவசியம். விடுதலையில்லாத இடத்தில் நீ எவ்வளவு காலம் விடுதலையை தேடினாலும், பெறமுடியாது. தவறான இடத்தில் தேடுகிறாய் .

ஆனால் அவள் நம்பிக்கையோடே தேடுகிறாள்.அவளிடத்தில் தாழ்மையிருந்தது. தாழ்மையே உயர்வுக்கு வழி என்பதை நீ மறந்து விடுகிறாய். அவள் பதில்பெற காலதாமதம் ஆனாலும், அவள் நம்பிக்கையை இழந்துவிடவில்லை. அநேகர் ஜெபித்தவுடன் பதில் கிடைக்கவில்லையென்றால் ஜெபிப்பதையே நிறுத்திவிடுகிறார்கள். ஒருவேளை இதை வாசிக்கும் சகோதரனே! சகோதரியே! நீ அவ்விதம் இருப்பாயானால் தேவனிடத்தில் ஜெபிப்பதை விட்டு விடாதே.

“நாய் குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல” என்றுசொல்லப்பட்டபோது அவள் அதைத் தாழ்மையாய் ஏற்றுக்கொண்டு அவள் தேவனை நோக்கிப்பார்த்தபொழுது, தேவன் அவள் விசுவாசத்தைப்பார்த்து என்ன சொல்லுகிறார்? “ஸ்திரீயே உன் விசுவாசம் பெரியது.” நிலைத்த விசுவாசமே ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும். அவளுடைய மகள் அந்நேரமே ஆரோக்கியமானாள். இயேசுவின் வல்லமையை சந்தேகிக்காதே. தேவன் உன்னிடத்தில் பலவீனராயல்ல பெலமுள்ளவராய் இருக்கிறார். அவர் சொல்ல ஆகும். அவர் கட்டளையிட நிற்கும்.